Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெளிநாடு ஏற்றுமதியால் முட்டை விலை மீண்டும் உயர்வு

நாகர்கோவில், செப்.3: வெளிநாடு ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவில் முட்டை முதலிடத்தில் உள்ளது. புரோட்டா கடைகள் மட்டுமின்றி இட்லி மற்றும் தோசை விற்பனை செய்யும் சிறிய உணவகங்களில் கூட முட்டை ஆம்லெட், புல்ஸ் ஐ (ஆப்பாயில்), முட்டை தோசை என அதிகம் விற்பனையாகிறது. டீ கடைகளிலும் முட்டை பப்ஸ், முட்டை சமோசா, முட்டை போண்டா, முட்டை நூடுல்ஸ் என அதிகம் பேர் விரும்பி உண்ணும் உணவு பொருளாக உள்ளது. முட்டை நுகர்வு அதிகம் காரணமாக முட்டை விலை ரூ.4.50 முதல் ரூ.5 வரை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகி வந்தது.

டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கேக் போன்ற உணவு பதார்த்தங்கள் தயாரிக்க முட்டைகள் அதிகம் ஏற்றுமதி ஆகும் என்பதால் டிசம்பர் முதல் ஜனவரி மாதம் முதல் வாரம் வரை முட்டை விலை அதிகம் இருக்கும். பின்னர் படிப்படியாக குறையும். கடந்த இரு ஆண்டுகளாக டிசம்பர் மாதங்களில் முட்ைட விலை குமரியில் ரூ.7 வரை விற்பனை ஆனாது. நடப்பாண்டில் ஜூன் மாதம் வரை முட்டை விலை ரூ.6.50 முதல் ரூ.7 வரை விற்பனை ஆனாது. இதன் பின்னர் குறைந்து முட்டை விலை ரூ.4.30 வரை சில்லறைக்கு விற்பனையானது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.4.80 முதல் ரூ.5.30 வரை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆனது. கடந்த வாரம் அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பால், அங்கு அனுப்பப்பட்ட முட்டைகள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இதனால், முட்ைட விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 15 நாட்களில் முட்டை விலை ரு.5 லிருந்து தற்போது ரூ.5.70க்கும் சில கடைகளில் ரூ.5.75 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து முட்டை மொத்த விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், அமெரிக்காவில் வரி விதிப்பு காரணமாக முட்டைகள் அங்கு செல்வது தடை பட்டாலும், தற்போது வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. குறிப்பாக தற்போது கத்தார் நாட்டிற்கு அதிகம் முட்டைகள் நாமக்கல் மண்டலத்தில் இருந்து செல்வதால், முட்டை விலை அதிகரித்துள்ளது.

தற்போது நாமக்கல்லில் முட்டை மொத்த கொள்முதல் விலை ரூ.5.05 காசுகளாக உயர்ந்துள்ளது. போக்குவரத்து செலவு உள்ளிட்ட இதர செலவுகள் காரணமாக குமரியில் ரூ.5.75க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முட்டை விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், கறிக்கோழி விலை அதிகம் இன்றி உள்ளது. கடந்த மாதம் ரூ.100க்கு விற்பனை ஆனாது. ஆடி மாதம் முடிந்ததும் விலை அதிகரிக்கும் என எதிர்்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அதிக பட்சம் 118 வரை கறிக்கோழி விற்பனை ஆகி வருகிறது. கறிக்கோழி விலை எதிர்பார்த்தது போல் அதிகரிக்க வில்லை.

அதே நேரம் முட்டை விலை எதிர்பார்த்ததை விட அதிகரித்து வருகிறது என அவர் கூறினார்.