Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரியில் காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்

நாகர்கோவில், நவ. 11: குமரியில் வெயில், மழை மற்றும் குளிர் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. குமரியில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலும், வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழையும் பெய்து வருகிறது. மேலும், கடந்த இரு நாட்களாக கடும் குளிரும் இரவில் காணப்படுகிறது. இதுபோன்ற மாறுபட்ட காலநிலை காரணமாக தலைவலி, இருமல், உடல் சோர்வுடன் காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது இதனை தவிர்க்க முன்னேற்பாடுகளுடன் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இது குறித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி நுரையீரல் பிரிவு தலைவர் டாக்டர் முத்துக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: பொதுவாக மழைக்காலம் முடிவடைந்து குளிர்காலம் தொடங்கும் போது, வைரஸ் காய்ச்சல், வயிற்று போக்கு வருவது, நுரையீரல் பிரச்னை உடையவர்களுக்கு சுவாச பிரச்னை வருவது இயற்கை. இதனை தவிர்க்க தண்ணீரை கொதிக்க வைத்து அருந்த வேண்டும். ஐஸ்க்ரீம், குளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இன்ப்ளூயன்ஸா எனப்படும் புளு காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த காய்ச்சல், தொடுதல் மற்றும் தும்மல் மூலம் காற்றில் பரவும் நீர்த்தளிகளால் பரவும் தன்மை கொண்டது. எனவே மாஸ்க் அணியலாம். இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்.

60 வயதிற்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட நோயுடையவர்கள், இதற்கான தடுப்பூசி போட்டு கொள்வது நல்லது. மேலும் புளு காய்ச்சல் ஏற்பட்டவர்கள் போதுமான ஓய்வு எடுப்பதுடன், வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். நோய் பரவலை தடுக்க அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்தால், மற்றவர்களுக்கு பரவாது. புளு காய்ச்சலின் தாக்கம் ஒரு வாரம் வரை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் என ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.