சிறப்பு பட்டியல் திருத்த கலந்தாய்வு கூட்டம் காஞ்சிபுரத்தில் 14,01,198 வாக்காளர்கள்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல்
காஞ்சிபுரம், அக்.30: தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர், பொது தேர்தல் அரசு செயலாளர் அறிவுரையின்படியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 01.01.2026ம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிமுறைகள் குறித்து கலெக்டர் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது, 04.11.2025 முதல் 04.12.2025 வரை ஒரு மாதம் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இப்பணியினை மேற்கொள்ள 1,401 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் அவர்களை கண்காணிக்க 145 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 04.12.2025க்குள் வாக்குச்சாவடி மறு வரையறை வகைப்படுத்த வேண்டும். 05.12.2025 முதல் 08.12.2025 வரை கட்டுப்பாட்டு பட்டியலினை புதுப்பித்தல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலினை தயார் செய்ய வேண்டும். 09.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியலினை வெளியிட வேண்டும். 09.12.2025 முதல் 08.01.2026 வரை கோரிக்கைகளும் மறுப்புரைகளும் பெற வேண்டும். 09.12.2025 முதல் 30.01.2026 வரை வீடுவீடாக சென்று பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் மீது வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆணை பிறப்பித்தல், கோரிக்கைகள், மறுப்புரையாக பெறப்பட்டவைகளை முடிவு செய்தல் வேண்டும். மேற்படி பணிகளை கண்காணிக்க வட்டாட்சியர் நிலையில் எட்டு உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும், அவர்களை மேற்பார்வையிட துணை ஆட்சியர் நிலையில் நான்கு வாக்காளர் பதிவு அலுவலர்களும் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.2026 அன்று வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் விவரம் மாநில தலைமை தேர்தல் அலுவலர் இணையதளமான https://www.elections.tn.gov.in மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் இணையதளமான https;//kancheepuram.nic.in-ல் பதிவேற்றம் செய்யப்படும். இந்த, பணிகளை மேற்கொள்ளும்போது வாக்காளர் பதிவு அலுவலர்கள் எந்தவொரு தகுதியான வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதிலிருந்து விடுபடக்கூடாது. தகுதியற்ற நபர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது. வீடுகளுக்கு 04.11.2025 முதல் 04.12.2025 வரை கணக்கெடுக்க செல்லும்போது வீடு பூட்டப்பட்டு இருந்தால் கணக்கீட்டு படிவத்தினை கணக்கெடுக்க செல்வோர், அந்த வீட்டில் வைத்துவிட்டு வருவர்.
வாக்காளர் சுயசான்று அளித்து 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்தால் போதுமானது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு சிறப்பு தீவிர திருத்தத்தின் செயல்முறைகளை விளக்கவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாக்காளர் பதிவு அலுவலரால் பயிற்சி வழங்கப்படும். வீடுவீடாக கணக்கெடுப்புக்கு முன், வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தி, சிறப்பு தீவிர திருத்தத்தின் அட்டவணை செயல்முறை மற்றும் அவர்களின் ஒத்துழைப்பு அவசியம் குறித்து அவர்களுக்கு விளக்குவார். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
