Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விஜயதசமியை முன்னிட்டு அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், செப்.30: காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகையுடன் 2025-2026ம் கல்வி ஆண்டு விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 10, 12ம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியானது கோட்டைக்காவல் கிராமம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல் என்கிற முகவரியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான, குரலிசை, நாதசுரம், தவில் தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய 7 கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்-பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். பயிற்சி முடிவில் மாணவர்களின் கல்வி தகுதிக்கேற்ப 10ம் வகுப்பு, 12ம் வகுப்பிற்கு இணையான அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சேர்க்கை கட்டணமாக முதலாமாண்டு ரூ.350, இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு கட்டணமாக ரூ.325 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ - மாணவியருக்கு இலவச பேருந்து பயணச்சலுகை, 16-17 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி மற்றும் மாதந்தோரும் ரூ.1000 அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இசைப்பள்ளியில், பயின்ற மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாதசுரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இப்பள்ளியில் 2025-2026 கல்வி ஆண்டில் சேர்ந்து பயில விண்ணப்பம் பெற ரமணி தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம்-631502 எனும் முகவரியில் நேரில் பெற்றுக்கொள்ளலாம் எனவும், மேலும் விவரம் வேண்டுவோர் இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் கைபேசி 94425 72948 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.