மாமல்லபுரம், ஆக.30: மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை முக்கிய சாலையாகும். இச்சாலை வழியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கு அரசு பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையின் நடுவே மாமல்லபுரம் கோவளம் சாலை, தென்மாட வீதி, திருக்கழுக்குன்றம் சாலை, பூஞ்சேரி கூட்ரோடு, ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மாடுகள் தினமும் சுற்றி வருவதுடன் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் போலீஸ் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றன.
அதேபோல், பைக்கில் செல்பவர்கள் திடீரென குறுக்கே ஓடும் மாடுகளின் மீது மோதி கீழே விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். ஒருசில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இந்நிலையில், மாமல்லபுரம் நகராட்சி அதிகாரிகள் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளோ, உள்ளாட்சி பிரதிநிதிகளோ யாரும் இதனை கண்டு கொள்வதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, தற்போது உள்ள மாவட்ட கலெக்டர் சினேகா உடனடியாக தலையிட்டு மாடுகளை சாலையில் திரியவிட்டால் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க போர்க்கால அடிப்படையில் உத்தரவிட வேண்டும்.
அதையும் மீறி மாடுகளை சாலையில் திரியவிட்டால் பறிமுதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘மாமல்லபுரம் இசிஆர் சாலை, ஓஎம்ஆர் சாலை, கோவளம் சாலை மற்றும் திருக்கழுக்குன்றம் சாலைகள், பூஞ்சேரி கூட்ரோடு முழுவதும் மாடுகள் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றன. மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை கயிற்றால் கட்டி பராமரிப்பது இல்லை. காலையில், பால் கறந்த பிறகு கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். ஒருசில உரிமையாளர்கள் மாடு இருக்கும் இடத்துக்கே சென்று பால் கறந்து விற்பனை செய்கின்றனர். இதனால், தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாட்டினை சாலையில் அவிழ்த்து மேய விட்டுள்ள உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, மாடுகளை பிடித்து கோசாலையில் விட வேண்டும்’ என்றனர்.