Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 27,647 ச.மீ. பரப்பில் 4 புதிய குளங்கள்: கூடுதலாக மழைநீர் சேமிக்க ஏற்பாடு

சோழிங்கநல்லூர், ஆக.30: கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களின் கொள்ளளவை 2 மடங்காக அதிகரிக்கும் வகையில், 27,647 ச.மீ., பரப்பளவில் புதிதாக 4 குளங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வர், வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒட்டுமொத்த சேவை துறைகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி ஒவ்வொரு துறையும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தான அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அந்த பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முதல்வர் தலைமையில் சேவை துறைகளுடனான கூட்டம் இந்த மாதம் நடந்து முடிந்துள்ளது. இதை தொடர்ந்து முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மழைநீர் தேக்கக்கூடிய புதிய பணிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார்கள். கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் இருந்து வருகிற உபரி நீரால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக சைதாப்பேட்டையில் இருக்கிற கிண்டி, பாரதியார் காலனி, வேளச்சேரி, மடுவன்கரை போன்ற பல்வேறு பகுதிகள் கடந்த ஆண்டு பெரிய பாதிப்புக்குள்ளானது.

இதை கருத்தில் கொண்டு, முதல்வர் கடந்த ஆண்டு கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை அரசு கையகப்படுத்தி 4.77 மில்லியன் கன லிட்டர் மழைநீர் கொள்ளளவு தேக்கக்கூடிய வகையில் 27,647 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய குளங்கள் இங்கே உருவாக்கப்பட்டு மழைநீர் தேக்கி வைக்கப்பட்டது. அதனால் திறந்தவெளியிலிருந்து வருகின்ற மழைநீர் அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்புதாரர்களை பாதிப்புகளுக்கு உள்ளாக்காமல் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் முதல்வர், பெரிய அளவில் மழை பொழிந்தாலும் அதனை தாங்கும் அளவிற்கான சக்தி கொண்ட குளங்களை உருவாக்குவதற்கு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் குளங்கள் தோண்டப்பட்டது, அதன்படி, தற்போது, 49,772 சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த 4 குளங்களும் பெரிய அளவில் நீர்த்தேக்கம் செய்யக்கூடிய அளவில் இருந்தாலும், இந்த ஆண்டு இங்கு மழை பொழிவு இருக்கும் போது தற்போது 8.66 மில்லியன் கன லிட்டர் மழைநீர் தேக்கி வைப்பதற்கான குளங்கள் இப்போது பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இது தென் சென்னை குடியிருப்பு பகுதிகளுக்கு மழைநீர் புகாத வண்ணம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. சென்னையை பொருத்தவரை 3081 கி.மீ தூரத்திற்கான மழைநீர் வடிகால்வாய்கள் இருக்கின்றன. இந்த 3081 கி.மீ கொண்ட மழைநீர் வடிகால்கள் பருவமழைக்கு முன்பாக தூர்வாரப்பட்டுள்ளன.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிறகு, சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து சென்னையில் கடந்த காலங்களில் எங்கெல்லாம் மழைநீர் தேங்கும் பிரச்னை இருந்ததோ அந்த பகுதிகளில் முற்றிலுமாக மழைநீர் தேக்கம் இல்லாமல் ஆக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில், கடந்த 4.5 ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 1000 கி.மீ நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால்கள் கட்டும் பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இன்னமும் 600 கி.மீ தூரத்திற்கு மழை நீர் வடிகால்கள் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த பணிகளும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே முடிக்கப்படும்.

வடகிழக்கு பருவமழையினால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அண்மையில் கூட கோடை வெப்பமழை, வெப்பச் சலன மழை போன்ற ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் பெய்யக்கூடிய மழைகளினால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் 10 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. கடந்த வாரம் கூட சென்னையில் பல்வேறு இடங்களில் 9 செ.மீ அளவிற்கு மழை பெய்தது. ஆனால் பாதிப்பு என்பது மழை பெய்து அரை மணி நேரத்திற்கு பின்பு மாநகர மக்கள் மழைநீர் பாதிப்புகள் இல்லாத நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சொன்னது போல 20 சென்டி மீட்டர் அளவிற்கு மழை பெய்தால் கூட அதை தாங்கும் சக்தி கொண்ட நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, அடையாறு மண்டலக்குழு தலைவர் ஆர்.துரைராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.