குன்றத்தூர், அக்.29: நீர்வரத்து குறைந்ததால், பூண்டி நீர்த்தகத்திலிருந்து 7000 கன அடியில் இருந்து மீண்டும் 6,000 கன அடியாக குறைத்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர் தேக்கங்கள் நிரம்பி வருவதால், நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2441 மில்லியன் கன அடியாக உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை, அம்மம்பள்ளி அணை, ராணிப்பேட்டை மாவட்டம் கேசவரம் அணை மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர், மழைநீர் என வினாடிக்கு 4650 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால், அணையின் பாதுகாப்பு கருதி நேற்று காலை 7 மணி நிலவரப்படி, நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 7,000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு, பின்னர் 6000 கன அடியாக குறைத்து, வெளியேற்றப்பட்டு வருகிறது.
* செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2929 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1221 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், ஏரியிலிருந்து வினாடிக்கு 750 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
* புழல் ஏரிக்கு நீர்வரத்து 2000 கன அடியாக அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி மீண்டும் புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் 250 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் சுமார் 13.5 கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று கலக்கிறது. இதனால், உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 739 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 367 கன அடியாக உள்ளது.
* கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 439 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது, என கொசஸ்தலை ஆறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

