பூந்தமல்லி, அக்.29: சாலையில் நடந்து சென்ற தாய், மகளை தெருநாய்கள் கடித்து குதறியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பூந்தமல்லி, மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் யாஸ்மின். இவரது மகள் சமீராவை (9), நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் யாஸ்மின் வீட்டிற்கு அழைத்து கொண்டு மகாலட்சுமி நகர் 5வது தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது, 2 தெரு நாய்கள் யாஸ்மீன், சமீரா ஆகியோர் மீது பய்ந்து கடித்து குதறியது. இதில், தாயும், மகளும் பலத்த காயமடைந்தனர். சிறுமி சமீராவிற்கு 10க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதேபோல், அதே பகுதியில் சைக்கிளில் சென்ற சிறுவனை தெரு நாய்கள் விரட்டி சென்று கடித்தது. இந்நிலையில், யாஸ்மின் மற்றும் சமீரா இருவரையும் தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. எனவே, பூந்தமல்லி நகராட்சி பகுதியில் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement

