செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகளை குப்பையை போல் அள்ளி போடும் மருந்தாளுனர்கள்
எதை எப்போது சாப்பிடுவது என தெரியாமல் விழி பிதுங்கும் நோயாளிகள்
நோய் எப்படி குணமாகும் என உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை
மேல்மருவத்தூர், ஆக.29: செங்கல்பட்டில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கண் பிரிவு, மகப்பேறு பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, முதியோர் நலன், குழந்தைகள் நலன், பல் மருத்துவம், தோல் நோய்கள் பிரிவு, இருதய பிரிவு மற்றும் அவரச சிகிச்சை பிரிவு, பொதுமருத்துவம் என பல்வேறு மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துமனையில் செங்கல்பட்டு மாவட்டம் மட்டும் அல்லாமல், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் பொரும்பாலானோர் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய பாமரமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு, தனியார் மருத்துவமனைக்கு நிகரான சிகிச்சை உபகரணாங்களும், மருத்துவ சிகிச்சையும் உள்ளன. இதனாலும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில், குறிப்பாக, உள்நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை நர்சுகளும், அவர்களின் உதவியாளர்களும் நோயாளிகளுக்கு நேரடியாக வழங்குகின்றனர். அதனால், அவர்கள் விரைவில் குணமாகி வீடுகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் புறநோயாளிகள் மருத்துவரை பார்த்து அவர் எழுதி கொடுக்கும் மருந்து, மாத்திரைகளை வாங்க மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருந்தகங்களுக்கு செல்கின்றனர்.
அங்கு மாத்திரைகளை நோயாளிகள் வாங்குகின்றனர். அவர்களுக்கு மருந்தாளுனர்கள் மாத்திரைகளை எப்போது எந்த வேளை சாப்பிட வேண்டும் என சொல்லுவதில்லை. அப்படி சொல்கின்றார்கள் என்றால் அவர்கள் காலை, மதியம் மற்றும் இரவு என மொத்தமாக மாத்திரைகளை வாரி போடுகின்றனர். அப்படி பேடுகின்ற மாத்திரைகள் எப்போது, சாப்பிட வேண்டும் என்று கேட்டால் நோட்டில் அல்லது சிட்டில் எழுதி இருப்பார்கள் என மருந்தாளுனர்கள் கூறிவிடுகின்றனர். மாத கணக்கில் மாத்திரைகள், மருந்து வாங்குபர்களுக்கு தான் நோட்டில் எழுதி இருக்கும் அதை பார்த்து சாப்பிடவும் மருத்துவர்களின் கையெழுத்து புரியாது. இதில், மாத்திரைகளின் பெயர்களும் தெரியாது, புரியாது. என்றோ ஒருநாள் வந்து செல்பவர்களுக்கு சீட்டில் மருத்துவர் எழுதி கொடுத்து இருப்பார், அந்த சீட்டையும் மருந்தகத்தில் வாங்கி விடுகின்றனர்.
இந்த மாத்திரைகளை எடுத்து வீட்டில் குழப்பத்துடன் தவறாக மாற்றி மாற்றி மாத்திரைகளை போடும்போது, நோய் குணமாகது. பக்க விளைவுகள்தான் அதிகமாகும். இதனால், அரசு மருத்துவமனைகளில் சென்றார் நோய் குணமாகாது என்ற பேச்சு மக்கள் மத்தியில் எப்போதுமே உள்ளது. இதனால், தனியார் மருத்துவமனைகளை சிலர் நாடி செல்கின்றனர். இதற்கு ஏற்றால் போல்தான், அரசு மருத்துவமனைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர் எழுதி கொடுக்கும் மாத்திரைகளில் படித்தவர்களுக்கு என்றார் மார்னிங் என்பதை ‘எம்’ என்றும், நைட் என்பதை ‘என்’ என்றும் மாத்திரையில் எழுதி தருகின்றனர். படிக்காதவர்களுக்கு காலை என்பதை ‘கா’, என்றும், இரவு என்பதை ‘இ’ என்றும் எழுதி தருகின்றனர்.
இன்றும் ஒருபடி மேல என்று கவர்களில் காலை, இரவு, மார்னிங், நைட் என்று எழுதி கொடுக்கின்றனர். இதனை அரசு மருத்துவமனைகள் பின்பற்றுவதில்லை. இதனை, பின் பற்றினால் மருத்துவனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடும். அதேநேரத்தில், தனியார் மருத்துவனைகளைபோல் மாத்திரை சாப்பிடும் வேளையை முறையாக நோயாளிகளுக்கு புரியும்படி எழுதி கொடுத்தால் நோயாளிகளுக்கு நோய் தீரும். மருத்துவனைமக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும். நோய்களும் காணாமல் போகும். அதுவே, நோயின்றி மக்கள் வாழ வழிவகுக்கும். இது இந்த மருத்துவமனைக்கு மட்டும் அல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு பொருந்தும்.
உள்ளே பளிச்... வெளியே கலிச்...
மருத்துவமனையில் அனைத்து உள் மற்றும் புற நோயாளிகள் பிரிவுகளில் அறைகள் ஒரு சில அறைகளை தவிர மற்றவை எல்லாம் பளிச் என்று காணப்படுகிறது. ஆனால், அந்த அறைகளில் வெளியே கடும் குப்பை கூலங்களாகவே காணப்படுகின்றன. அதனை மருத்துவ நிர்வாகம் கண்டு கொள்ளாததால் கொசு உற்பத்தியாகும் மையமாகவே காணப்படுகிறது. பல்வேறு காலி இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர்.
இதயத்தில் கொஞ்சம் பிரச்னை
மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் மருத்துவர்கள், நர்ஸ் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் அக்கல்லூரியின் மாணவர்கள், பிற கல்லூரி மாணவர்கள் மதிப்பும், மரியாதையும் பிரமிக்க வைக்கிறது. ஆனால், இதயவியல் துறையில் உள்ள மருத்துவர்கள், நர்ஸ்கள் ஆகியோர் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோரிடம் எரிந்து விழுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இதனால், நோயாளிகளுக்கு இதய பிரச்னை கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை என நோயாளிகள் மற்றும் உடன் வருவோர் புலம்பி செல்கின்றனர்.
கழுவாத கழிப்பறைகள்
செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் உள்நோயாளிகள் வார்டு பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் ஓரளவிற்கு சுத்தமாக உள்ளன. ஆனால், சரியான பராமரிப்பின்றி காணப்படுகிறது. அதேபோல், புறநோயாளிகள் பிரிவுகளில் உள்ள நோயாளிகள் பிரிவு பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமாகவும் இல்லை; பாராமரிப்பும் இன்றி உள்ளன. ஆனால், ஒரு சில இடங்களில் கழிப்பறைகளில் சுத்தம் செய்யப்பட்டதாக டிக் செய்யப்பட்டு கையெழுப்பமும் இடப்பட்டுள்ளது. ஆனால், சுத்தமாக இல்லை. அவை கடமைக்கு செய்யப்பட்டுள்ளது. சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக டிக் செய்து கையெத்து இட்டவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று மருத்துவனைக்கு வெளியில் உள்ள கழிப்பறைகளில் துர்நாற்றமும், கழிப்பறைகளை கழிவியே பல நாட்கள் ஆனது போலும் காட்சியளிக்கின்றன. இதனை பார்க்கும்போது சுத்தமே உன் விலை என்ன என்பது போல் உள்ளது. இந்த கழிப்பறைகளை பயன்படுத்துபவர்கள் நோயை வாங்கி கொண்டு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மருந்து மாத்திரைகள் வழங்குவதை கவனீங்க...
மருத்துவனையின் டீன், ஆர்எம்ஓ ஆகியோர் மருத்துவமனையில் வீசிட் வரும்போது, உள் நோயாளிள், புற நோயாளிகள் பிரிவில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். அவ்வாறு அல்லாமல் மருந்து, மாத்திரை வழங்கும் இடங்களில் ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான், அங்கு நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மாத்திரை வாங்கி செல்லும் போது அவர்கள் புலம்புவது தெரியும் என நோயாளிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
பொறுப்பில்லாத பொதுமக்கள்
மருத்துவமனையில் உள்நோயாளிகள் சாப்பிட்டு விட்டு ஜன்னல் வழியாக உணவு கழிவுகளை தூக்கி எரிகின்றனர். நோயாளிகளுடன் இருப்போர் உணவு கழிவுகள், அழுக்கான துணி, தலையணை ஆகியவற்றை பெட்டின் ஓரம் இருக்கும் ஜன்னல் வழியாக தூக்கி எரிந்துள்ளனர். இதனாலும், நோயாளிகளின் அறைகளை ஒட்டி குப்பை கழிவுகள் காணப்படுகின்றன. இதனை துப்புரவு பணியாளர்களும் கண்டும் காணாமலும் விட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் இரவு நேரத்தில் கொசுத்தொல்லை உள்ளது என அவர்களே புலம்பி தள்ளுகின்றனர்.
ரூபாய் கேட்டு ருத்தரதாண்டவம்
அவசர பிரிவு பகுதி, உள் நோயாளிகளை மற்ற மருத்துவ பிரிவுகளுக்கு, அதாவது கண் பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி, எக்கோ, கல்லீரல் சோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு வீல் சேர், ஸ்ரேச்சர் ஆகியவற்றில் அழைத்து தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அழைத்து செல்கின்றனர். அவ்வாறு அழைத்து செல்பர்கள் தரைத்தளம், ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடம், முதல் மற்றும் மூன்றாவது தளங்களுக்கு நோயாளிகளை ஏற்றார் போல் நோயாளிகளின் உறவினர்களிடம் காசு கோட்டு நச்சரிக்கின்றனர். இவ்வளவு தூரம் தள்ளிக் ெகாண்டு வந்துள்ளேன் உங்களுக்கு கருணையே இல்லையா... இவ்வளவு கொடுங்கள்... என்ற காசு கேட்கின்றனர். காசு கொடுக்க மறுப்பவர்களிடம் ருத்தரதாண்டவம் ஆடுகின்றனர். ஒருசிலர் காசு கொடுக்கும்போது, யாரும் பார்க்காதவாரு காசு கொடுங்கள் என மறைவான இடத்தில் வைத்து காசை வாங்கி செல்கின்றனர். நோயாளிகளின் உறவினர்களே வீல் சேரை நாங்களும் தானே தள்ளி வந்தோம் என புலம்பி செல்கின்றனர்.