மாமல்லபுரத்தில் பிரதமர்-சீன அதிபர் சந்திப்பின்போது பதிக்கப்பட்ட நடைபாதை கருங்கற்கள் பெயர்ந்து சேதம்: கடற்கரை கோயில் அருகே பயணிகள் அவதி விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்
மாமல்லபுரம், ஆக.29: மாமல்லபுரத்தில், கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் அரசு முறை பயணமாக சந்தித்து பேசினர். அப்போது, பல்வேறு முக்கிய கோப்புகளில் இருவரும் கையெழுத்திட்டனர். இவர்கள், வருகையொட்டி மாமல்லபுரம் முழுவதும் புதிய சாலைகள் அமைத்தல், அழகு செடிகள் நடுதல், குடிநீர் வசதி, ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுதல், செல்போன் டவர்களை அகற்றுதல், நடைபாதை கற்கள் பதித்தல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதனால், மாமல்லபுரம் புது பொலிவு பெற்றது.
மேலும், மோடி-ஜின்பிங் வருகையொட்டி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், சுற்றுலாத் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று மாமல்லபுரம் பேரூராட்சியாக இருந்த போது, பேரூராட்சி நிர்வாகம் கடற்கரை கோயில் நுழைவு பகுதியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் நடைபாதையில் கருங்கற்களை பதித்தது. இந்நிலையில், அந்த நடைபாதையை சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக பராமரிக்காமல் விட்டதால், நாளடைவில் நடைபாதை கற்கள் ஒவ்வொன்றாக பெயர்ந்து, கிட்டதட்ட 30க்கும் மேற்பட்ட கற்கள் பெயர்ந்து காணாமல் போய் உள்ளது. இதனால், பார்ப்பவர் கண்களுக்கு நடைபாதை அலங்கோலமாக காணப்படுகிறது. அவ்வழியே, கடற்கரைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் நடைபாதையை பார்த்து முகம் சுழித்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக தலையிட்டு நடைபாதையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.