கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செயற்கை பவள பாறைகள் அமைக்க வேண்டும்: செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தல்
மாமல்லபுரம், நவ.28: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செயற்கை பவள பாறைகள் அமைக்க மீன்வளத்துறை முன் வர வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. கானத்தூர் ரெட்டி குப்பம் தொடங்கி, கோட்டைக்காடு குப்பம் வரை 57 கிமீ நீளம் கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இது 33 மீன்பிடி கிராமங்களில் பலதரபட்ட மீன்கள் பிடிபடும் கடற்கரை பகுதியாக உள்ளது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் கடல் சார் மீன்பிடித்தலை அடிப்படை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். மேற்கண்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நாள்தோறும் கடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு சிறிய படகுகளில் சென்று மீன்பிடித்து விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடலில் செங்கல்பட்டு மாவட்ட எல்லைப் பகுதியில் கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வசதி படைத்த மீனவர்கள் பலர் பெரிய லாஞ்சரில் வந்து, தடை செய்யப்பட்ட ராட்சத வலைகள் விரித்து மீன்களை பிடித்து செல்கின்றனர். குறிப்பாக, கரைப்பகுதி வரை வந்து மீன்களை பிடிப்பதால் லாஞ்சரின் அடிப்பகுதியில் சிக்கி பல ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் இறந்து விடுகின்றன. இதனால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதோடு, கடல் வளமும் முழுமையாக பாதிக்கப்படுகிறது.
மேலும், லாஞ்சரில் வந்து மீன்களை பிடித்து செல்வதால், கானத்தூர் ரெட்டிகுப்பம் முதல் கோட்டைக்காடு மீனவ கிராமங்கள் வரை கடலில் மீன் இனப்பெருக்கம் குறைந்து காணப்பட்டு, மீனவர்களின் வலைகளில் குறைந்தளவு மீன்களே சிக்குகின்றன. சில நேரங்களில், மீன்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பொருட்களே சிக்குகின்றன, சொற்ப எண்ணிக்கையில் மீன்கள் சிக்குவதாகவும் கூறப்படுகிறது. ஒரு சில, நேரங்களில் வெறுங்கையோடு ஏமாற்றத்துடன் கரை திரும்பி வரும் சூழ்நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், மீனவ குடும்பங்கள் போதிய வருமானமின்றி வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும், குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, லாஞ்சரில் வந்து மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்தி, கானத்தூர் ரெட்டி குப்பம் முதல் கோட்டைக்காடு மீனவ கிராமங்கள் வரை மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்க பவள பாறைகளை கடலில் அமைக்க மீன் வளத்துறை முன்வர வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, மீனவர்கள் கூறுகையில், கானத்தூர் ரெட்டி குப்பம் முதல் கோட்டைக்காடு குப்பம் வரை கடந்த சில மாதங்களாக கடலில் மீன்களின் இனப்பெருக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால், போதிய வருமானமின்றி எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் விரல் விட்டு எண்ணும் அளவிலே மீன்கள் கிடைக்கிறது. கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல், கனமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருப்போம் என்றனர்.
பிற மாவட்டங்களைப் போல்...
தமிழ்நாட்டில் பல்வேறு கடலோர மாவட்டங்களில் கடல் வளத்தை பாதுகாக்கவும், சிறு தொழில் மீனவ சமுதாய வாழ்வாதாரம் மேம்படவும், கடலில் மீன்வளம் அதிகரிக்கவும் செயற்கை பவள பாறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று, செங்கல்பட்டு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
லாஞ்சரை தடுக்க வேண்டும்
கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த வசதி படைத்த மீனவர்கள் பெரிய லாஞ்சரில் வந்து, ராட்சத வலைகளை விரித்து மீன்களை பிடித்து செல்கின்றனர். இதனால், செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள் மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே, லாஞ்சரில் வந்து மீன்பிடிப்பதை மீன் வளத்துறையும், கடலோர காவல் படை போலீசாரும் தீவிரமாக கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும்.
வட்டம், சதுரம் செவ்வகம் வடிவில்
செங்கல்பட்டு மாவட்ட கடல் எல்லைப் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் கடலில் வட்டம், சதுரம், செவ்வகம் வடிவில் செயற்கை பவள பாறைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்கள் ஏமாற்றம்
கானத்தூர் ரெட்டி குப்பம் முதல் கோட்டைக்காடு குப்பம் வரை உள்ள 33 மீனவ கிராமங்களில் இருந்து 3,500க்கும் மேற்பட்டோர் சிறிய ரக படகில் சென்று கடலில் மீன் பிடித்து வருகின்றனர். ஆனால், சில மாதங்களாக எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. இதனால், மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

