குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை 4 வாரத்தில் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பல்லாவரம், அக்.28: சென்னை ஜிஎஸ்டி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமான குரோம்பேட்டை, பல்லாவரம் கால்வாய்களில் உள்ள 81 ஆக்கிரமிப்புகளை 4 வாரங்களில் அகற்ற வேண்டும், என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரோம்பேட்டையை சேர்ந்த இயற்கை ஆர்வலர் டேவிட் மனோகர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளின் ஜிஎஸ்டி சாலையில் இருந்து செல்லும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. எனவே, அந்த கால்வாய்களில் மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்தினால், பல்லாவரம் தாலுகாவில் வெள்ளப்பெருக்கை தடுக்கலாம்.
குரோம்பேட்டை, பல்லாவரம் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதை அகற்ற வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினேன். எனது மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒய்.கவிதா மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, கால்வாய்கள் ஆய்வு செய்யப்பட்டு 30 ஆக்கிரமிப்புகள் குறித்து தாசில்தார் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றார். அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 81 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்றுவதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கால்வாயில் உள்ள 81 ஆக்கிரமிப்புகளையும் 4 வாரத்திற்குள் அகற்ற வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

