மாமல்லபுரம், ஆக.27: மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மரத்தில் செய்யப்பட்ட விநாயகர் சிலை, டேபிள், சேர் உள்ளிட்ட மர பொருட்கள் எரிந்து சாம்பலானது. மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையொட்டி விஜயகுமார் என்பவர் கற்சிற்பக்கலை கூடம் நடத்தி வருகிறார். இந்த, சிற்பக்கலை கூடத்தில் கற்சிலைகள், மரச்சிலைகள் மற்றும் மர பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து மர பொருட்கள் எரிந்தது. அப்போது, தீ மள மளவென பரவி அருகில் உள்ள மரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை, மர டேபிள், சேர் உள்ளிட்ட மர பொருட்கள் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ் உத்தரவின் பேரில், முதன்மை தீயணைப்பாளர் ரமேஷ்பாபு மற்றும் 4 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீர் பீய்ச்சி அடித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், அருகில் உள்ள மற்ற சிற்பக்கலை கூடங்களுக்கு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், மர விநாயகர் சிலை, டேபிள், சேர் மற்றும் சிமென்ட் ஷீட்டுகள் எரிந்து சாம்பலானது. சில கற்சிலைகளும் தீ விபத்தால் விரிசல் ஏற்பட்டது. சிற்பக்கலை கூடத்தில் மர பொருட்கள் திடீரென தீப்பிடித்து ஏரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.