திருக்கழுக்குன்றம் அருகே வெள்ளப்பெருக்கு பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் மூழ்கியது: 5 கிராம மக்கள் தவிப்பு உயர்மட்ட பாலப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
திருக்கழுக்குன்றம், அக்.26: திருக்கழுக்குன்றம் அருகே ஆற்றில் வெள்ளம் தற்காலிக பாலம் உடைந்ததால் 5 கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருவதால், ஆமை வேகத்தில் நடக்கும் புதிய பாலம் கட்டும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட இரும்புலிச்சேரி பாலாற்றின் குறுக்கே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த, பாலத்தைதான் இரும்புலிச்சேரி, அட்டவட்டம், சாமியார் மடம் சின்ன எடையாத்தூர், கல்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வந்தனர்.
இது மிகவும் பழமையான பாலம் என்பதால், பாலத்தின் பல்வேறு பகுதிகள் அங்காங்கே உடைந்துப்போய் கிட்டத்தட்ட தொங்கு பாலம் போல் காட்சியளித்தது. எனினும் கிராம மக்கள் வேறு வழியின்றி உயிர் பயத்துடனே அந்தபாலத்தை பயன்படுத்தி வந்தனர். கடந்த 2015ம் ஆண்டு கனமழையின்போது பாலாற்றில் கரை புரண்டோடி ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், அந்த பழமையான பாலம் உடைந்து சுக்கு நூறானது. இதனால், இப்பாலத்தை போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த கிராம மக்கள், வெளியில் வர முடியாமல் தீவுகளில் சிக்கியதுபோல் சிக்கி தவித்தனர்.
அப்போதைக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக நகர்புறங்களுக்கு வரக்கூடியவர்களுக்காக அரசு தரப்பில் பாலாற்றில் படகுகள் விடப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு ஆற்றில் தண்ணீர் வற்றியபின், அப்போதைய போக்குவரத்திற்காக வெள்ளத்தில் உடைந்துபோன பாலத்திற்கு சற்று அருகாமையில் ஆற்றின் குறுக்கே பெரியபெரிய பைப்புகளை அடுக்கி அதன் மீது மண் கொட்டி தற்காலிக தரைப்பாலம் ஒன்றை அமைத்தனர். உடனடியாக வெள்ளத்தில் உடைந்துபோன பாலம் இருந்த அதே இடத்திலேயே தங்களுக்கு தரமான உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டுமென்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய மேம்பாலம் கட்டுவதற்காக ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உயர்மட்ட பாலம் கட்டும் பணியும் தொடங்கியது. ஆனால், அந்த புதிய பாலம் கட்டும் பணி ஆரம்பித்த நிலையிலிருந்து, ஆமை வேகத்திலேயே நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு ஏரி, குளங்கள் வல்லிபுரம், வாயலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளும் நிரம்பி வருகிறது. தொடர்ந்து திருக்கழுக்குன்றம் பாலாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ள நிலையில், இரும்புலிச்சேரி பாலாற்றின் குறுக்கே 2015ம் ஆண்டு அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் உடைப்பட்டு, பாலத்தை மூழ்கும் அளவு வெள்ளம் ஓடுவதால் பாதுகாப்பு நலன் கருதி அப்பாலத்தை அதிகாரிகள் தற்போது மூடியுள்ளனர்.
கடந்த 2015 முதல் தற்போது வரை ஆண்டுதோறும் மழைக்காலங்களில் ஆற்று வெள்ளநீரில் இந்த தற்காலிக பாலம் உடைந்துப்போய் சில நாட்கள் மூடப்பட்டதால் மக்கள் அவதியுற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்தாண்டும் இந்த தற்காலிக பாலம் மூடப்பட்டதால் எப்போதும்போல் இரும்புலிச்சேரி, சாமியார் மடம், அட்டவட்டம், சின்ன எடையாத்தூர், கல்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் வெளியில் நகர்புறங்களுக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர். ஆண்டாண்டாக இதுபோன்று மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் ”சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டு” போல் தாங்கள் தீவுகளில் தவித்தும், தனித்தும் அவதியுற்று வருகிறோம். அதனால், புதிய மேம்பாலப் பணியை விரைந்து முடித்து, அடுத்தாண்டு மழை வெள்ளத்திக்குள்ளாவது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

