குன்றத்தூர், அக்.26: குன்றத்தூர் அருகே நூதன முறையில் திருடப்பட்ட காரை பறிமுதல் செய்து, குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் மகேந்திரகுமார் (42). இவர், சொந்தமாக கார் வைத்து, ஆன்லைனில் இணைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்தில் இருந்து காரை ஆன்லைனில் புக் செய்து, குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் வரை வந்த தினேஷ் என்ற நபர், வீட்டில் இருக்கும் தனது வயதான அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதன்பேரில், காரை நிறுத்திவிட்டு மகேந்திரகுமார் இறங்கிச்சென்ற சிறிது நேரத்தில், மின்னல் வேகத்தில் அந்த நபர் காரை திருடிச்சென்றார்.
இதுகுறித்து மகேந்திரகுமார், குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மகேந்திரகுமாரின் சொகுசு காரை தேடியபோது, அந்த கார் ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், சாவியுடன் இருந்த திருடப்பட்ட காரை பறிமுதல் செய்து, காரை திருடிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். குடிபோதையில் காரில் பயணம் செய்த நபர், காரை திருடிக்கொண்டு அவர் பணிபுரியும் கம்பெனிக்கு அருகிலேயே காரை நிறுத்திவிட்டு சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

