Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம்: வணிக நிறுவனங்கள், பொதுமக்களுக்கு தாம்பரம் மாநகராட்சி எச்சரிக்கை

தாம்பரம், செப்.25: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட நகரின் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசாணை 24.2.2024ன்படி, ஒருமுறையே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் தடிமன் வேறுபாடின்றி அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகளும் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் ஸ்பூன், போர்க், கத்தி, பிளாஸ்டிக் தட்டுகள், உணவுப் பொட்டலத்திற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், ஒட்டும் படலம், சாப்பாட்டு மேஜையில் விரிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தகடுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் கோப்பைகள், பிளாஸ்டிக் தேநீர் கோப்பைகள், பிளாஸ்டிக் டம்ளர், தெர்மாகோல் கோப்பைகள், பிளாஸ்டிக் பூசிய கேரி பேக்குகள், நான் ஒவன் கேரி பைகள்,

தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் வைக்கோல், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் குச்சிகளுடன் கூடிய காது மொட்டுகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய், பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட ஐஸ்கிரீம், அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன், பிளாஸ்டிக் கரண்டி மற்றும் பிளாஸ்டிக் கத்திகள் போன்ற பொருட்கள் தமிழக அரசால் விற்பனை செய்வதற்கும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே வணிக நிறுவனங்கள் விதிகளை மீறி மேற்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் பொருட்களை பறிமுதல் செய்வதுடன் ரூபாய் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்க நேரிடும். எனவே வணிக நிறுவனங்களும் பொதுமக்களும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன்பாட்டினை தவிர்த்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், துணிப்பைகளை பயன்படுத்திடவும், பிளாஸ்டிக்கை ஒழித்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.