Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

31 கிமீ நீளத்திற்கு இட ஆய்வுப்பணி நிறைவு தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.713.56 கோடியில் 4வது ரயில் பாதை: ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

தாம்பரம், அக்.24: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, ரூ.713.56 கோடியில் 4வது ரயில் வழித்தடம் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சுமார் 60 கிலோ மீட்டர் நீளம் உள்ள வழித்தடத்தில் தினசரி 4 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 4 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், புறநகர் ரயில் சேவை இந்த குறிப்பிட்ட வழித்தடங்களில் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3 வழித்தடங்கள் மட்டுமே இருப்பதால், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு இடையே புறநகர் ரயில் சேவையை நீட்டிக்க இயலவில்லை. பெரும்பாலான ரயில் சேவைகள் தாம்பரத்துடன் நிறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட ரயில் சேவை மட்டுமே செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படுகிறது. இதனால், தாம்பரம்-செங்கல்பட்டு பகுதிகளில் வசிப்போர் புறநகர் ரயில்களில் செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இது பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னை. இதையடுத்து தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை அமைக்க வேண்டும் என தமிழகத்தின் சார்பில் ரயில்வே அமைச்சகத்திடம் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் பலமுறை ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4வது ரயில் பாதை அமைப்பதற்கு இட ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழுவதும் நிறைவடைந்தது. மேலும், ரூ.713.56 கோடி மதிப்பீட்டில் 4வது வழித்தடம் அமைக்கவும் ரயில்வே அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த புதிய வழித்தடத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த 4வது வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே கூடுதலாக புறநகர் மின்சார ரயில் சேவையை இயக்க முடியும். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் 4வது வழித்தடம் அமைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் ரயில் போக்குவரத்து அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லும். இந்த திட்டம் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறும். மேலும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு பொதுமக்கள் எளிதில் செல்ல வாய்ப்பு ஏற்படும். ஒட்டுமொத்தமாக சென்னை மக்களின் புறநகர் ரயில் பயணங்களை இத்திட்டம் மேலும் எளிதாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.