காஞ்சிபுரம், அக்.24: காஞ்சிபுரம் மாநகருக்கு உட்பட்ட ஒலிமுகமதுபேட்டை பகுதியில் செயல்படும் எச்பி பெட்ரோலியத்தின் தனியார் ஏஜென்சீஸில் நேற்று வாடிக்கையாளர்கள் பலர் பெட்ரோல் நிரப்பினர். அப்போது பலரது வாகனங்கள் ஆங்காங்கே அடைத்தபடி நின்றிருக்கிறது. இதில் காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை, வரதப்பன் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், இரண்டரை லிட்டர் பெட்ரோல் போட்டுச் சென்ற நிலையில், அவரது பைக்கும் அடைத்தபடி நின்றிருக்கிறது. இதனையெடுத்து, அவர் அருகாமையில் உள்ள மெக்கானிக் கடைக்கு பைக்கை எடுத்துச் சென்றபோது, பைக்கில் நிரப்பபட்டிருந்த பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரன், பெட்ரோல் பங்க்கிற்கு வந்து ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் அலட்சியமாக, ‘அது ஒன்றும் இல்லை, தண்ணீர் கலந்திருக்கும்’ என கூறியதாக கூறப்படுகிறது. இதனால், ஆவேசமான பாஸ்கரன் ஊழியர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். பின்னர் இங்கு பெட்ரோல் நிரப்பி ஆங்காங்கே நின்ற பலரும் பெட்ரோல் பங்க்கிற்கு படையெடுத்தனர். தங்களுக்கும் இதே நிலைதான் எனக்கூறி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையெடுத்து, ஒருவருக்கு போடப்பட்ட பெட்ரோல் தொகைக்கான தொகையை கொடுத்து அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
+
Advertisement

