செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்: பெண் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
செங்கல்பட்டு, செப்.24: பெருங்களத்தூரைச் சேர்ந்த திருநங்கைகள் 32 பேருக்கு காட்டாங்குளத்தூர் ஒன்றியம், ஓழலூர் கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில், பட்டா வழங்கப்பட்டதற்கான ஆவணம் சிலருக்கு வழங்கப்படவில்லை, என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் தலையிட்டு ஓழலூர் கிராமத்தில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை அளவீடு செய்து எல்லைக் கற்கள் நட்டனர். இந்நிலையில், திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இடத்தில் இருந்த எல்லை கற்களை மர்ம நபர்கள் அகற்றியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த திருநங்கைகள், நேற்று செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். வட்டாட்சியர் இல்லாத நிலையில், திடீரென்று ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைக் கண்ட வட்டாட்சியர் அலுவலக பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாமல் திகைத்து நின்றனர். மேலும், அலறியடித்துக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர். இதனால் வட்டாட்சியர் அலுவலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் திருநங்கைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தனர். ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று கூறி கலைந்து சென்றனர். திருநங்கைகள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.