Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடியில் கட்டப்படும் நவீன பேருந்து நிலையம் டிசம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

மாமல்லபுரம், செப்.24: தினகரன் செய்தி எதிரொலியாக மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டும் வரும் நவீன பேருந்து நிலையத்தில் அனைத்து பணிகளும் முடித்து வரும் டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். யுனெஸ்கோ நிறுவனத்தால் 1984ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட உலக புகழ் வாய்ந்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் நலன் கருதி, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 1992ம் ஆண்டு நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. மாமல்லபுரத்தின் எல்லை பகுதியான கருக்காத்தம்மன் கோயில் எதிரில் 6.79 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அங்கிருந்த குடியிருப்புகளை அகற்றி, வருவாய்த்துறை மூலம் நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த, 2020ம் ஆண்டு அங்கு மண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பேருந்து நிலையத்திற்கு உகந்த இடம் என சான்று பெறப்பட்டது.

இந்நிலையில், ரூ.90.50 கோடி நிதி ஒதுக்கி பல்வேறு அம்சங்களுடன் நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கட்டுமானப் பணிகள் தொடங்கியது. பின்னர், மழை காரணமாக அங்கு தண்ணீர் தேங்கியதால் கட்டுமானப் பணி தடைபட்டது. 8 மாதங்களில் முழுமையாக கட்டி முடிக்க வேண்டிய நவீன பேருந்து பணிகள் 20 மாதங்களாக ஆமை வேகத்தில் மந்தமாக நடந்து வந்தது.

இதுகுறித்து, கடந்த 8ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அமைச்சர் தா.மோ. அன்பரசன் பல்வேறு துறை அதிகாரிகளுடன் காட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, திருப்போருர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, சப்-கலெக்டர் மாலதி ஹெலன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் வாசுதேவன், நகராட்சி ஆணையர் அபர்ணா, வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ், திமுக மாவட்ட பொருளாளர் விசுவநாதன் திருப்போரூர் சேர்மன் இதயவர்மன், நகராட்சி கவுன்சிலர் மோகன் குமார், விசிக ஒன்றிய செயலாளர் இசிஆர் அன்பு, நகர செயலாளர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘2006-2011 வரை உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் மாமல்லபுரத்தில் நவீன பேருந்து நிலையம் கட்டுவதற்கு முடிவெடுத்தார்’. ஆனால், பேருந்து நிலையம் பூஞ்சேரியில் தான் கட்ட வேண்டும் என சிலர் நீதிமன்றம் சென்றதால், அந்த பணி தொடங்க முடியாமல் போனது. அதன், பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அந்த பணியை கிடப்பில் போட்டது. மீண்டும், 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ரூ.90.50 கோடி நிதி ஒதுக்கி சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நவீன பேருந்து நிலைய கட்டுமான பணிகளை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இங்கு, தீயணைப்பு அறை டிக்கெட் கவுண்டர், குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் அறை, பணியாளர்கள் ஓய்வு அறை, கேண்டீன், பெண்கள் ஓய்வு அறை, 2 ஏடிஎம், 360 இருசக்கர வாகனங்கள், 117 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இடங்களில் லிப்ட் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது. டிசம்பர் மாதம் அனைத்து பணிகளும் முடிவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு, அவர் கூறினார்.