நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வெள்ள தடுப்பு பணி தீவிரம்: கலெக்டர் ஆய்வு
கூடுவாஞ்சேரி, அக்.23: தமிழகத்தில் தற்போது வடக்கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் விட்டுவிட்டு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், உதயசூரியன் நகர், பகுதிகளில் உள்ள உபரி நீர், வடிநீர் கால்வாய்களை மாவட்ட கலெக்டர் சினேகா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து, காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணு பிரியா நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சுற்றி மழைநீர் தேங்கியிருந்ததை, கலெக்டர் சினேகா நேரில் சென்று ஆய்வு செய்து வீடுகளை சுற்றி தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். பின்னர், பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மற்றும் காரணைப்புதுச்சேரி ஊராட்சிகளை இணைக்கும் சந்திப்பு இடத்தில் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட உஷா நகரில் உள்ள உபரிநீர் கால்வாயினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, ஜெகதீஷ் நகரில் செல்லும் உபரிநீர் கால்வாயினை கலெக்டர் சினேகா பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, வண்டலூர் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், மீனாட்சி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் சந்தானம் உள்பட பலர் உடனிருந்தனர்.

