திருப்போரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலி மாவு பாக்கெட்டுகள் படுஜோராக விற்பனை: நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு மாவு விற்பனை கடைகளில் சோதனை நடத்த கோரிக்கை
திருப்போரூர், செப்.23: திருப்போரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலி மாவு பாக்கெட்டுகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது எனவும், அதனால் நோய்கள் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாவு விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் மாவு தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒரு காலத்தில் ஆட்டுக்கல், உரல் ஆகியவற்றின் மூலம் நமது காலை உணவான இட்லி, தோசை, ஆப்பம் ஆகியவற்றுக்கான மாவு அரைக்கப்பட்டது.
பின்னர், 80களின் தொடக்கத்தில் கிரைண்டர் மற்றும் மிக்சி ஆகியவை வந்த பிறகு, ஆட்டுக்கல் மறக்கடிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பின், அவர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிசைத்தொழில் போன்று அரிசி மாவு அரைத்து தரும் கடைகள் தோன்றி விட்டன. சில பெரு நிறுவனங்களும் இந்த தொழிலில் இறங்கி வண்ண மயமான பாக்கெட்டுகளில் மாவுப் பொருட்களை விற்று வருகின்றன. இந்நிலையில், சில தனியார் நடத்தும் மாவு கடைகளில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நல்ல தரமான அரிசி, மினரல் வாட்டர், உளுந்து ஆகியவை சேர்க்கப்பட்டு தரமாக தயாரிக்கப்பட்ட மாவு பாக்கெட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களில் இந்த வியாபாரங்களை கட்டுகிறது.
அவசரமாக வாங்கிச் செல்லும் பொருள் என்ற வகையில் இந்த மாவு பாக்கெட்டுகளிலும் போலிகள் வரத் தொடங்கி விட்டன. குறிப்பாக ரேஷன் கடையில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்கும் சிலர் சுகாதாரமற்ற முறையில் இந்த மாவு பாக்கெட்டுகளை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படாமல் சாதாரண குழாய் தண்ணீர், வாடகைக்கு இருக்கும் கடை அல்லது வணிக வளாகத்தில் உள்ள பாத்ரூம் குழாய், கழிப்பறை குழாய் போன்றவற்றில் இருந்து வரும் தண்ணீரை கூட மாவு அரைக்க பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக இந்த மாவை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே, ஒவ்வொரு ஒன்றிய அளவில் மாவட்ட அளவிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், இந்த மாவு விற்பனை கடைகளில் சோதனை நடத்தி தரமான அரிசி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் போன்றவை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவு அரைக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படாமல் சாதாரண குழாய் தண்ணீர், வாடகைக்கு இருக்கும் கடை அல்லது வணிக வளாகத்தில் உள்ள பாத்ரூம் குழாய், கழிப்பறை குழாய் போன்றவற்றில் இருந்து வரும் தண்ணீரை கூட மாவு அரைக்க பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இலவச இணைப்பாக...
திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட பகுதிகள் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருவதால், தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த பகுதிகளில் பல்வேறு வேலைகளுக்காக மக்கள் குடியேறு வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதிகளில் விற்கப்படும் போலி மாவு பாக்கெட்டுகளை வாங்கி அவசரத்திற்கு பயன்படுத்துவோருக்கு வாயிற்றுபோக்கு, வாந்தி, தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இலவச இணைப்பாக அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. இதனை தடுத்து நிறுத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இந்த பகுதிகளில் உள்ள மாவு விற்பனை கடை மற்றும் வீடுகளில் மாவு விற்பனை செய்யும் இடங்களில் சோதனை நடத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.