மதுராந்தகம், நவ.22: மதுராந்தகத்தில் 15 சென்ட் இடத்தில் மூன்று சென்ட் இடத்தை தொண்டு நிறுவனத்திற்கு தானம் செய்ய வந்தவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஈசூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி கலா பெயரில் உள்ள 15 சென்ட் இடத்தில் மூன்று சென்ட் இடத்தை சிவம் தொண்டு நிறுவனத்திற்கு தானம் செய்ய மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகம் வந்துள்ளார். அதற்கு சார்பதிவாளர் கார்த்திகேயன் லஞ்சமாக ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார். இறுதியாக பேரம் பேசி ரூ.15 ஆயிரம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. பத்திரப்பதிவு செய்யும்போது ரூ.10 ஆயிரமும், மீதி பணம் ரூ.5 ஆயிரம் நிலம் எழுதி கொடுத்ததற்கான பத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெறும்போது கொடுப்பது என பேசி முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சிவராமன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிவராமனிடன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். தொடர்ந்து, சிவராமன் நேற்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று சார்பதிவாளர் கார்த்திகேயனிடம் லஞ்சப் பணம் 10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது, சார்பதிவாளர் அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கார்த்திகேயனை கையும், களவுமான கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பத்திர எழுத்தர் சிவா என்பவரையும் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். லஞ்சப் பணம் வாங்கிய சார்பதிவாளர், பத்திர எழுத்தர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியது.

