விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு ரூ.8.73 லட்சம் பயிர் கடன்: காஞ்சி கலெக்டர் வழங்கினார்
காஞ்சிபுரம், நவ.22: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், மாவட்ட கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு, வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும், விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு, துறைச்சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, தாமல் மற்றும் புள்ளலூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 10 விவசாய பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்து 688 மதிப்பிலான பயிர் கடன்களையும், 4 விவசாய பயனாளிகளுக்கு ரூ.52 ஆயிரத்து 677 மதிப்பிலான (நுண்ணீர் பாசன செயலாணையும், மண்புழு உரபடுக்கையும்) வேளாண் இடுப்பொருட்கள் என மொத்தம் ரூ.8 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
அப்போது கலெக்டர், பயிர்கடன் பெற்ற விவசாய பயனாளிகள், விவசாய நிலத்தில் விதைகள் விதைக்கபடுவது முதல் அறுவடை காலம் வரை பல்வேறு காலகட்டங்களில் பயிர் நன்றாகவும், பூச்சிகளின்றி பாதுகாக்கவும் மற்றும் மகசூல் அதிகமாக தருவதற்கும் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே தரமான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் போன்றவற்றை வாங்குவதற்கு முன்பணம் தேவைப்படும் பட்சத்தில் கூட்டுறவு வங்கி மூலம் பயிர்கடன் வழங்கி, விவசாயிகளுக்கு பயனுள்ள பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் கோ.யோகவிஷ்ணு, வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

