Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம்

பெரும்புதூர், ஆக.21: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆவணி மாதம் முதல் செவ்வாயையொட்டி, மூலவர்  வள்ளி - தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவர் கோடையாண்டவருக்கும் மண்டலாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். பெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் கிருத்திகை நாளிலும், செவ்வாய் கிழமையிலும் வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு கட்டுதல், திருமணம், இழந்த பதவி, நலமான வாழ்வு ஆகியன கிடைப்பதாக ஐதீகம். அதனால், மேற்படி நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆவணி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால், நேற்று முன்தினம் அதிகாலை முதற்கொண்டே பக்தர்கள் வல்லக்கோட்டையில் குவிந்தனர். காலை 5 மணிக்கு கருவறையில் உள்ள மூலவர்  வள்ளி - தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவர் கோடையாண்டவருக்கும் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மூலவர் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எலுமிச்சை மாலை மற்றும் சாமந்தி மலர்மாலைகள் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

சஷ்டி மண்டபத்தில் உள்ள உற்சவர் கோடையாண்டவர் மலர் அலங்கார சேவையில் காட்சியளித்தார். இதில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, ``அரோகரா... அரோகரா..’’ என்று கோஷமிட்டு வரிசையில் சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு கதம்பசாதம், மோர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.