காஞ்சிபுரம், ஆக.21: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்த மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை (22ம் தேதி) காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்களும், அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டு, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று, வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசு திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தனி தேசிய விவசாய அடையாள எண் வழங்கும் பொருட்டு வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை களப்பணியாளர்களை தொடர்பு கொண்டு விவசாயிகள் ஆதார், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி மற்றும் கம்ப்யூட்டர் சிட்டா கொண்டு சென்று பதிவு செய்ய வேண்டும். மேலும், நுண்ணீர் பாசனம் திட்டத்தில் பயனடைவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைவதற்கு சிட்டா, ஆதார் அட்டை, நீர் பரிசோதனை அறிக்கை, நில வரைபடம், விவசாயி புகைப்படம் மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.