Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு: நோயாளிகள் பொதுமக்கள் அச்சம்

காஞ்சிபுரம், ஆக.20: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.

இந்த, அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளான தாமல், பாலுசெட்டிசத்திரம், முசரவாக்கம், திம்மசமுத்திரம், ராஜகுளம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், ஆர்ப்பாக்கம், ஓரிக்கை, செவிலிமேடு, அய்யங்கார்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளான சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து, சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

மேலும் அருகில் உள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இங்கு, உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரை கவனித்துக் கொள்ள வரும், பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிகளின் உதவியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்போர் அறை மற்றும் வெளியில் மரத்தடி மற்றும் வார்டுக்கு வெளியில் உள்ள பகுதிகளில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சாலையில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து விடுகின்றன. அந்த, தெரு நாய்கள் கூட்டமாக மருத்துவமனை வளாகத்திற்குள் சுற்றி திரிவதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதனை கண்டு அச்சம் அடைகின்றனர். யாராவது நாய்களை விரட்டும்போது, அது கூட்டத்திற்குள் புகுந்து விடுகிறது. அப்போது, பெண்கள் கூச்சலிட்டு அலறியடித்து ஓடுகின்றனர்.

இதில், ஒருசில நாய்களுக்கு தோல் நோய் ஏற்பட்டு, ரோமம் உதிர்ந்து சொறி பிடித்தது போல் உள்ளது. மேலும், உடலில் காயங்கள் மற்றும் புண்களுடன் நோய் தாக்கிய தெருநாய்கள் சுற்றித் திரிவதால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்கியதின் காரணமாக வெறிபிடித்துள்ள தெரு நாய்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களை துரத்துவதால் அச்சம் அடைகின்றனர். இதுமட்டுமின்றி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் தெருநாய்கள், சிறுவர்கள், முதியோர் மற்றும் பெண்களை துரத்தி கடிக்கும் சம்பவங்கள், தினந்தோறும் நடைபெறுகின்றன. குறிப்பாக, கடைகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியர், நடைபயிற்சிக்கு செல்வோர், இரவில் பணி முடித்து வீடு திரும்புவோர் என பலரையும் நாய்கள் கடித்து காயப்படுத்துகின்றன.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் மட்டும், ஆண்டுக்கு சராசரியாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், நாய்கடியால் பாதிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்திலேய நாய்கள் தொல்லை அதிகரித்திருப்பது பலரையும், அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நாய்களுக்கான கருத்தடை மையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் கடந்த 2015ம் ஆண்டு திருக்காலிமேடு பகுதியில், நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான மையம் அமைக்கப்பட்டது. தெருநாய்களை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட இந்த நாய்களுக்கு கருத்தடை மையம் சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், இந்த கருத்தடை மையம் செயல்படாமல் மூடியே கிடக்கிறது. எனவே, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த திருக்காலிமேடு நாய்களுக்கான கருத்தடை மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தலைநகர் தில்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தால் தெருநாய்களுக்கு காப்பகங்கள் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், நடைமுறை சாத்தியமில்லாதது என ஒரு தரப்பினர் இதனை விவாத பொருளாக்கி உள்ளனர்.

மேலும், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழும் உரிமை உண்டு. அதன் அடிப்படையில், தெருநாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பது வாழ்வதற்கான உரிமையை தடை செய்வது போன்றது. மாறாக, தெருநாய்கள் அதிகரிப்பிற்கான காரணத்தை ஆய்வு செய்து, அதை கட்டுப்படுத்துவதற்கு கருத்தடை செய்தல் உள்ளிட்ட நடைமுறைக்கு சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். எது எப்படி இருப்பினும், நன்றியுள்ள பிராணியாக அறியப்படும் நாயை நாம் செல்லப் பிராணியாக வளர்த்தாலும் அது ஒரு விலங்கு என்பதால், அதன் அடிப்படை குணம் அப்படியேதான் இருக்கும். அதற்கு பய உணர்ச்சி ஏற்பட்டால் தன்னை தற்காத்துக்கொள்ள மனிதர்களை பயமுறுத்தும்.

இந்த, உணர்ச்சி அதிகளவில் தூண்டப்பட்டால் மனிதர்களை கடித்துக் குதறும். இதனால், ஏற்படும் விளைவுகள் மோசமானதாக இருப்பதால் நாய்களிடத்தில் அதிக எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ வட்டாரங்களில் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில், சுற்றித்திரியும் தெருநாய்களின் தொல்லையை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.