பாதாள சாக்கடை அடைப்பால் மாமல்லபுரம் கடற்கரையில் தேங்கும் கழிவுநீர் கடலில் கலக்கும் அவலம்: சுற்றுலா பயணிகள் அவதி
மாமல்லபுரம், நவ.19: மாமல்லபுரம் கடற்கரையில் கழிவுநீர் தேங்கி நின்று, கடலில் கலப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர். இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னைக்கு அருகே 60 கிமீ தூரத்தில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி மாமல்லபுரம் சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. இங்குள்ள அழகிய கடற்கரை கோயிலை ரசிக்கவும், பல்லவ மன்னர்களால் செதுக்கப்பட்ட ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, முகுந்தராயர் மண்டபம் ஆகியவற்றை காணவும் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும், மாமல்லபுரத்தில் புகழ்பெற்ற தலசயன பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக பக்தர்கள் வந்து செல்லும் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மேனுவல் மூடி வடியாக கழிவுநீர் வெளியேறி கடற்கரை கோயிலின் வடக்கு திசை கடற்கரையோரம், கழிவுநீர் குளம்போல் சூழ்ந்து சகதிகள் தேங்கி கடலில் கலக்கிறது. கடற்கரையை ஒட்டிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கடற்கரைக்குச் செல்கிறது. இதனால், கடல் வளம் கெட்டு மீன்கள் இறந்து கடற்கரையில் ஒதுங்கி, மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காத அபாய நிலை உள்ளது.
அதுமட்டுமின்றி, கடல் சீற்றம் ஏற்படும்போது ஏராளமான கடல்நீர் ஆங்காங்கே கடற்கரையில் உள்ள பள்ளங்களில் தேங்கி கழிவுநீராக மாறியும் காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு கடற்கரையின் சுற்றுப்புற சுகாதாரமும் சீர்கெட்டுள்ளது. கடற்கரையின் அழகை ரசிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரை மிதித்துக் கொண்டு தாவித்தாவி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை கடற்கரையிலேயே போட்டு தங்கள் பங்குக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். இந்த பிளாஸ்டிக் கவர்கள் கடலில் 10 கிமீ தூரம் வரை மிதப்பதாக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கூறுகின்றனர்.
யுனெஸ்கோவால், அங்கீகரிக்கப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை நகரம் இதுபோல், பராமரிப்பின்றி சாக்கடை கழிவாக காட்சியளிப்பதை பார்க்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவற்றை தங்கள் செல்போன்களில் படம் எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இதனால், சுற்றுலாத் தலத்தின் பெயர் கெடுவதோடு தொடர்ச்சியாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக சுற்றுலா வழிகாட்டிகள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக அந்நிய செலாவணி வருவாய் குறையும் வாய்ப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. மாமல்லபுரம் கடற்கரையையும், புராதனச் சின்னங்களையும் நம்பி ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. மாமல்லபுரம் நகராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு பணிகளை திறம்பட செய்து, நேரிலும் சென்று கண்காணிக்கின்றனர். ஆனால், நகராட்சி ஆணையர் மற்றும் போதிய பணியாளர்கள் இல்லாததால் கழிவுநீர் பிரச்னையை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
மேலும், போதாத குறைக்கு ஓட்டல், ரெஸ்ட்டாரண்ட், அருகில் உள்ள வீடுகளில் இருந்தும் கழிவுநீர் திருட்டுத்தனமாக கடற்கரைக்கு விடப்படுகிறது. எனவே, மாவட்ட கலெக்டர், உடனடியாக தலையிட்டு, மாமல்லபுரம் நகராட்சிக்கு புதிய ஆணையர் மற்றும் போதிய பணியாளர்களை நியமித்து, மாமல்லபுரம் கடற்கரையை சீரமைத்து கழிவுநீர் விடுபவர்கள் மீதும், கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும் எனவும், பாதாள சாக்கடை அடைப்பை உடனுக்குடன் சரிசெய்து கடலில் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


