தாம்பரம், நவ.19: தாம்பரம் அருகே 3வது மாடியில் இருந்து நாய்க்குட்டிகளை கீழே தூக்கி வீசி கொன்ற வடமாநில தொழிலாளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலையூர் அடுத்த வேங்கைவாசல், சிவபூஷணம் நகர், 6வது தெருவில் 3 அடுக்கு கொண்ட கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில், தெரு நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இதனால், கட்டிட தொழிலாளர்கள் மொட்டை மாடியில் பணியில் ஈடுபட்டபோது, அந்த நாய் குறைத்துள்ளது. இந்நிலையில், தாய் நாயுடன் சில குட்டிகள் கீழே சென்ற நிலையில், 2 நாய்க்குட்டிகள் மட்டும் மொட்டை மாடியில் இருந்துள்ளது.
இந்த நாய்க்குட்டிகளும் கட்டிட தொழிலாளர்களை பார்த்து குறைத்தபடி இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு கட்டிட தொழிலாளி, இரும்பு கம்பியால் 2 நாய்க் குட்டிகளையும் சரமாரியாக தாக்கி 3வது மாடியில் இருந்து தூக்கி கீழே வீசி உள்ளார். இதில் அந்த 2 நாய்க் குட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்தன. கட்டிட தொழிலாளியின் இந்த செயலை அந்த கட்டிடத்தின் அருகே உள்ள வீடுகளில் இருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இதனை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் விக்னேஷ் என்பவர், சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த நாய்க் குட்டிகளை பார்வையிட்டு, பின்னர் இதுபற்றி சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், வீடியோ காட்சிகள் ஆதாரத்தை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது நாய்க்குட்டிகளை கொடூரமாக தாக்கி மாடியில் இருந்து தூக்கி வீசியது வட மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராம் ஜுல்பிகர் என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


