Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூடுவாஞ்சேரி - ஆவடி புதிய ரயில் வழித்தடத்திற்கு ரூ.4,081 கோடியில் திட்ட அறிக்கை: தெற்கு ரயில்வே தகவல்

கூடுவாஞ்சேரி, செப்.19: சென்னை புறநகர் பகுதியான ஆவடி முதல் கூடுவாஞ்சேரியை இணைக்க புதிய ரயில் பாதை திட்டம் தயாராகி வருகிறது. ரூ.4,081 கோடியில் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை விளக்குகிறது. சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப புறநகர் பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, பெரும்புதூர், ஆவடி போன்ற பகுதிகளில் தொழிற்சாலைகள், குடியிருப்புகள் பெருகிவிட்டன. தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அதற்கேற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு, அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் வசதி கருதி, சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் கிளாம்பாக்கத்தில் நின்று செல்லும் வகையில் அங்கு புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், குத்தம்பாக்கத்தில் மேலும் ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆவடி - பெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே 58 கி.மீ., தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க 2013ல் அறிவிப்பு வெளியானது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ரயில்வே ஒப்புதல் பெற்றது. கடந்த ஆண்டு இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது. தற்போது 234 பக்கங்களில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் மதிப்பு, நிலம் தேவை, ரயில் நிலைய அமைவிடங்கள், பயணிகளின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் அறிக்கையில் உள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆவடி - பெரும்புதூர் - கூடுவாஞ்சேரியை இணைக்கும் புதிய ரயில் பாதை திட்டம் மிகவும் முக்கியமானது. இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 58 கி.மீ., தூர ரயில் பாதைக்கு 57.19 ஹெக்டேர் நிலம் தனியாரிடம் இருந்து கையகப்படுத்த உள்ளது. அதாவது, 141.31 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 229 ஏக்கர் நிலம் தேவைப்படும். ஆவடி, வயலாநல்லூர், திருமழிசை, தண்டலம், ஸ்ரீபெரும்புதூர், வல்லக்கோட்டை, ஒரகடம், நாட்டரசன்பேட்டை, கூடுவாஞ்சேரி, இருங்காட்டுக்கோட்டை ஆகிய 10 இடங்களில் ரயில் நிலையங்கள் வர உள்ளன. இந்த தடத்தில் வருடத்துக்கு 43.51 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது.

இந்த பகுதியில் நிறைய தொழிற்சாலைகள் இருக்கும் காரணத்தால் சரக்கு போக்குவரத்தும் நன்றாக இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. நிலம் எடுப்பது உள்பட எல்லா செலவுகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.3,136 கோடி செலவு ஆகும். ரயில் பாதை வேலைகளுக்கு மட்டும் ரூ.945.78 கோடி செலவாகும். இந்த திட்டத்தை 5 வருடத்தில் முடிக்க இலக்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ரயில் பாதை திட்டம் சென்னை புறநகர் பகுதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் குறையும். தொழிற்சாலைகளுக்கும் உதவியாக இருக்கும்,’’ என்றனர்.