காஞ்சிபுரம், நவ.18: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு என புதியதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் ஊர்வலம் அடுத்த மாதம் 6ம் தேதியும், 7ம்தேதி தங்கத்தேருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்படவுள்ளது என ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சபூத ஸ்தலங்களில் பிரித்வி எனும் நிலத்துக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏலவார்க் குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.29 கோடி செலவில் திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் 8ம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது.
ஏகாம்பரநாதர் கோயிலுக்கு உற்சவ காலங்களில் பயன்படுத்த தங்கத்தேர் வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை கொடுத்து வந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள், உபயதாரர்கள் பங்களிப்புடன் தங்கத்தேர் செய்யும் பணி தொடங்கப்பட்ட நிலையில், இடையில் நின்றுபோனது. இதனையறிந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி, காஞ்சி சங்கராச் சாரியார் விஜயேந்திரர் உத்தரவின்படி, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த, அறக்கட்டளை நிர்வாகிகளின் மேற்பார்வையில் புதிய தங்கத்தேர் செய்யும் பணி காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பகுதியில் உள்ள மகாபெரியவர் மணி மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் 40 சிற்பிகள் மூலம் தங்கத்தேர் செய்யும் பணி தொடங்கப்பட்டு, அப்பணியானது நிறைவடைந்தது.
இந்த, தங்கத்தேர் 25 அடி உயரமும், 10 அடி அகலத்துடன், 4 வேதங்களை குறிக்கும் வகையில் 4 குதிரைகளும், 4 சாமரம் வீசும் பெண்கள் நின்ற கோலத்திலும், 16 நந்திகள், 8 கந்தர்வர்கள், 8 சங்கு நாத பூதங்களும், பிரம்மா தங்கத்தேரை ஓட்டுவது போலவும், 5 அடுக்குகளுடன் 2 டன் தாமிர தகடுகளும், அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தேர் உருவாக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இந்த, தங்க தேரினை ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று நேரில் பார்வைவிட்டனர்.
இதுகுறித்து, அறக்கட்டளை நிர்வாகி மகாலட்சுமி சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஏகாம்பரநாதர் கோயிலுக்கென உருவாக்கப்பட்டுள்ள தங்கதேருக்கு டிசம்பர் 4ம் தேதி ஓரிக்கை மகா சுவாமிகள் மணிமண்டபத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கி, 5ம் தேதி சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகிறது. தொடர்ந்து, 6ம் தேதி மாலை ஓரிக்கையில் இருந்து ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வெள்ளோட்டமாக இழுத்துச்செல்லும் நிகழ்வு விமரிசையாக நடைபெறும். தங்கத்தேரை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும்,7ம் தேதி தங்க தேருக்கு ஏகாம்பரநாதர் கோயில் வளாகத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். 8ம் தேதி மகா கும்பாபிஷேக நாள் அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் கோயில் நிர்வாகத்திடம் தங்கத்தேர் ஒப்படைக்கும் விழா நடைபெறவுள்ளது. இவ்வாறு கூறினார். நிகழ்வின்போது ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் பத்மநாபன் வலசை ஜெயராமன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


