தமிழ்நாட்டு வளர்ச்சியை மனதில் கொண்டு தேர்தல் வாக்குறுதியில் இலவச திட்டங்கள் அறிவிக்க வேண்டும்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கருத்து
காஞ்சிபுரம், அக்.18: தமிழ்நாட்டு வளர்ச்சியை மனதில் கொண்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்களை அறிவிக்க வேண்டும், என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியில் அமமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. முன்னதாக காஞ்சிபுரத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக 54ம் ஆண்டு துவக்க விழாவில் நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்கிறது என்ற எடப்பாடி பழனிசாமி கடிதம் குறித்த கேள்விக்கு, யாரோ எழுதின கடிதத்திற்கு, எந்நேரமும் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். எதிர்க்கட்சியாக இருப்பதற்காக எதுவென்றாலும் பேசுவதற்கு நான் எடப்பாடி பழனிச்சாமி இல்லை. நீண்ட நாள் கழித்து கட்சி அலுவலகத்திற்கு விஜய் வந்திருப்பதற்கு நாம் என்ன கருத்து சொல்ல வேண்டி உள்ளது.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து, கரூர் சம்பவம் விசாரிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் என்ன வருகிறது என்பதை பார்ப்போம்’. வருங்காலத்தில் அதாவது 2026 தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளை அனைத்து கட்சிகளும் வாரி வழங்காமல், வருங்கால சந்ததி மற்றும் தமிழ்நாட்டு வளர்ச்சியை மனதில் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பாக இலவச திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. எல்லோருமே சமூக பொறுப்புணர்வோடு செயல்பட்டால் இது எல்லாம் சரியாகிவிடும். குறிப்பாக அதனை வழிநடத்துகின்ற தலைவர்கள் அதனை சரி செய்ய வேண்டும், என்றார்.

