Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2000 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அரசு திட்டம் மதுராந்தகத்தில் புதிய சர்வதேச நகரம்: மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ டெண்டர்

மதுராந்தகம், செப்.18: பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் சென்னை அருகே மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியுள்ளது. தமிழகத்திற்கு பன்முக வளர்ச்சி திட்டங்கள் கொண்ட அந்த பட்ஜெட்டில், இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக இருக்கக் கூடிய தமிழகத்தின் தலைநகரமான சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

டெல்லி, மும்பை, புனே போன்ற மாநகரங்களில் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசல், காற்றின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மக்கள் தொகை பெருக்கம் போன்ற பலவிதமான பிரச்னைகளை குறைக்கும் நோக்கில் துணை நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவில் அதிக நகரமயமாதல் மற்றும் அதனுடன் எழும் சவால்களை சந்தித்து வரும் மாநிலங்களுள் தமிழ்நாடு ஒன்றாகும். அதிலும் குறிப்பாக, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களை நோக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இதனால், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை வசதிகள், குடிநீர், தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் அகற்றல் போன்ற அடிப்படைத் தேவைகளையும், பேருந்து வசதிகள், கல்வி மற்றும் பொது சுகாதார வசதிகளையும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் வழங்க நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. அதன்படி, 2025-26ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

அதில், பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதி நுட்ப வணிக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள், மாநாட்டுக் கூடங்கள் மட்டுமன்றி, அரசு மற்றும் தனியார் துறையின் மூலம் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகள் அளிக்கும் நிறுவனங்களும் இந்நகரத்தில் அமைக்கப்படும்.

சமூகத்தின் உயர் வருவாய் கொண்ட வகுப்பினர், மத்திய தர வகுப்பினர் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட வகுப்பினர் என அனைவருக்குமான வீட்டு வசதிகள் நிறைந்த பன்னடுக்கு கட்டிடங்கள் கொண்டதாக இந்நகரம் அமையும். விரிவான சாலைகள், தகவல் தொழில்நுட்ப மற்றும் பசுமை மின்சக்தி அமைப்புகள், பகிர்ந்த பணியிடச் சேவை மற்றும் நகர்ப்புரச் சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற பொழுது போக்குச் சேவை கட்டமைப்பு வசதிகளும் இந்நகரில் இடம்பெறும். சென்னை மாநகரை இப்புதிய நகரத்துடன் இணைத்திட உரிய சாலை வசதிகள், விரைவுப் பேருந்துகள், மெட்ரோ ரயில் விரிவாக்கம் வசதிகளுடன் ஆகியவையும் உருவாக்கப்பட உள்ளது.

இருப்பினும் பெருநகரங்களின் விரிவாக்கம் ஆங்காங்கே நடைபெறுவதைக் காட்டிலும், பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமானது எனும் நகரமைப்பு வல்லுநர்களின் கருத்தை ஏற்று முதற்கட்டமாக சென்னைக்கு அருகே ஓர் புதிய நகரம் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து முதற்கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஐந்து இடங்களை அடையாளம் கண்ட ஆய்வு நிறுவனங்கள் டிட்கோவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சர்வதேச நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) தற்போது டெண்டர் கோரியுள்ளது.

பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்

புதிய சர்வதேச நகரம் குறித்து நகர திட்டமிடல் நிபுணர்கள் கூறியதாவது: தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், பின்டெக் மண்டலங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு நகரத்தை உருவாக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், சிறந்த போக்குவரத்து மற்றும் இணைப்பு வசதிகளையும் உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நகரங்களை சீரற்ற முறையில் விரிவுபடுத்துவதை விட, ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும். இது பொது மற்றும் தனியார் துறை கல்வி மற்றும் சுகாதார வசதிகளையும் வழங்கும். சென்னையின் புறநகரில் ஒரு உலகளாவிய நகரத்தை உருவாக்குவதற்கு விரிவான திட்டமிடல் அவசியம். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வணிகங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களை ஈர்ப்பதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். இது வீடுகள், கடைகள் மற்றும் பிற தொடர்புடைய வணிகங்களின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் நன்கு திட்டமிடுவதன் மூலம், முதலீடுகளையும், திறமையான மனிதர்களையும் ஈர்க்கும் நகரமாக சென்னையை உருவாக்க முடியும்’’ என்றனர்.