சோழிங்கநல்லூர், ஆக.18: சென்னை கொண்டித்தோப்பு ரத்தினம் தெருவை சேர்ந்தவர் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு, திருமணமாகி கணவர், 2 மகள்கள் உள்ளனர். இதில், 17 வயதுடைய இளைய மகள் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சிறுமி, நேற்று முன்தினம் வீட்டின் குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்தபோது, பின்பக்க வீட்டில் வசித்து வரும் ராகேஷ் (52) என்பவர், சிறுமி குளிப்பதை ஜன்னல் வழியாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி, அலறி கூச்சலிட்டதால் ராகேஷ் ஓட்டம் பிடித்துள்ளார். இதுபற்றி சிறுமி, தனது தாயிடம் கூறியுள்ளார். அதன்பேரில், தாய் தேவி பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து ஆய்வாளர் மனோன்மணி வழக்கு பதிவு செய்து, கொண்டித்தோப்பு சரவணன் தெருவை சேர்ந்த ராகேஷை கைது செய்தனர். இவர், அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருவது தெரிந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, ஆபாச வீடியோ அழிக்கப்பட்டது.