திருக்கழுக்குன்றம், அக்.17: திருக்கழுக்குன்றம் ஒன்றியம், புதுப்பட்டினம் ஊராட்சியில் சென்னை - புதுச்சேரி இணைக்கும் பழைய கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இங்குள்ளவர்கள், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளியூர்களுக்குச் செல்ல கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பேருந்து நிறுத்தத்தைத்தான் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மழைநீர் வடிகால்வாய் இல்லாததால், லேசான தூறல் பெய்தாலும் பேருந்து நிறுத்தம் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றுவிடும். பலத்த மழையில் அறவே இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதியுற்று வருகின்றனர். அது மட்டுமின்றி, பேருந்து நிறுத்தத்தையொட்டி பள்ளி வாசல் உள்ளது. இங்கு, தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களும் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையை போக்க இந்த கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் முறையான மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள், கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ம.தனபாலின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மழைநீர் வடிகால்வாய் பணியை மேற்கொள்ள புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால் தலைமையில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.
+
Advertisement