திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் வரை சென்னை அஞ்சல் குறியீடு வழங்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
திருப்போரூர், செப்.17: திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் வரை சென்னை அஞ்சல் குறியீடு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியானது கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரையிலும், பழைய மாமல்லபுரம் சாலையில் திருப்போரூர் வரையிலும், ஜி.எஸ்.டி சாலையில் மறைமலைநகர் வரையிலும் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. பல்வேறு ஊர்களுக்கும் அந்தந்த ஊரின் பெயர் அடையாளமாக இருந்தாலும், தொழில், கல்வி, சுற்றுலா போன்றவற்றின் வளர்ச்சி என்பது சென்னை என்ற பெயரை நம்பியே உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், அப்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதையும் சென்னை தொலைபேசி என்ற அமைப்பின் கீழ் கொண்டு வந்தார். இதனால், 5 இலக்க தொலைபேசிகள் அனைத்தும் 8 இலக்க தொலைபேசிகளாகவும், 5 இலக்க எஸ்.டி.டீ. குறியீடு 044 என்ற 3 இலக்க குறியீடாகவும் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலமாக இப்பகுதிகள் சென்னை புறநகர் பகுதிகள் என அழைக்கப்பட்டு தொழில் வளர்ச்சி வேகமடைந்தது. சென்னையின் அஞ்சல் குறியீடு 600 என்று தொடங்குகிறது. இந்த, குறியீட்டு எண்ணில் தொடங்கும் ஊர்களில் செல்போன் சிம் கார்டுகள் வாங்குதல், வங்கி கடன் பெறுதல், வாகனங்கள் வாங்குதல் போன்றவைகள் எளிமையாக உள்ளன.
செல்போன் சேவை வழங்குவதில் சென்னை வட்டம், தமிழ்நாடு வட்டம் என இரண்டு வட்டங்கள் உள்ளன. சென்னை செல்போன் சிக்னல் வட்டம் என்பது மாமல்லபுரம், திருப்போரூர், மறைமலைநகர் வரை உள்ளது. அதைத்தாண்டினால் தமிழ்நாடு செல்போன் வட்டம் தொடங்குகிறது. சென்னை சர்க்கிள் என்று அழைக்கப்படும் பகுதியாக இருந்தாலும் திருப்போரூர், மாமல்லபுரம் பகுதிகளுக்கு சென்னை அஞ்சல் குறியீடு இல்லாததால் போஸ்ட் பெய்ட் சிம்கார்டுகள் இப்பகுதி மக்களுக்கு வழங்க முடியாது என செல்போன் நிறுவனங்கள் மறுத்து விடுகின்றன. உதாரணமாக கேளம்பாக்கத்திற்கு அஞ்சல் குறியீடு 603 103 என்றும், திருப்போரூர் பகுதிக்கு அஞ்சல் குறியீடு 603 110 என்றும், மாமல்லபுரத்திற்கு 603 104 என்றும் உள்ளது.
இதனால், செல்போன் அழைப்புகள் மூலமாக வரும் வங்கி கடன்கள், பாஸ்போர்ட், பான்கார்டு சேவைகள், போஸ்ட்பெய்ட் செல்போன் சேவைகள் சென்னை அஞ்சல் குறியீடு உங்கள் ஊருக்கு இல்லையா என்று கேட்டு அதனால் முடியாது என்று மறுத்து விடுகின்றனர். வங்கி கடன் தருவதாக செல்போன்களில் பேசுபவர்கள் முதலில் உங்கள் ஊரின் அஞ்சல் குறியீடு எண் என்ன என்றே கேட்கிறார்கள். சென்னைக்கான அஞ்சல் குறியீடு இல்லை என்று சொன்னால் எங்கள் சர்வீஸ் அந்த பகுதியில் இல்லை என்று கூறி விடுகின்றனர்.
இதன் காரணமாக, சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாக இருந்தும் சென்னை மக்களுக்கு கிடைக்கும் வசதிகளை அனுபவிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கு, ஒரே வழி வளர்ச்சியடைந்த புறநகர் பகுதிகளை சென்னை அஞ்சல் வட்டத்திற்குள் கொண்டு வருவதுதான். தற்போது பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூர், சிறுசேரி, தாழம்பூர் போன்ற பகுதிகளுக்கு 600 130 என்றும், கேளம்பாக்கம் & வண்டலூர் சாலையில் உள்ள மாம்பாக்கம், கொளத்தூர், பனங்காட்டுப்பாக்கம் பகுதிகளுக்கு 600 127 என்றும் சென்னை அஞ்சல் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை படூர், கேளம்பாக்கம், கோவளம், வடநெம்மேலி, திருவிடந்தை, மாமல்லபுரம், பையனூர், திருப்போரூர், தையூர் போன்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி சென்னை அஞ்சல் குறியீடு வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்வேறு தொழில்கள் தொடங்கவும், கல்லூரி, பள்ளி போன்றவற்றை நடத்தவும் சென்னைக்கான அஞ்சல் குறியீடு என்பது ஒரு அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே சென்னை அஞ்சல் துறை நிர்வாகம் புறநகர் பகுதிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரையிலும், பழைய மாமல்லபுரம் சாலையில் திருப்போரூர் வரையிலும், ஜி.எஸ்.டி சாலையில் மகேந்திரா சிட்டி வரையிலும் சென்னைக்கான அஞ்சல் குறியீடு வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.