காஞ்சிபுரம், அக்.16: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை கோயில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்திவிட்டுச் செல்வார்கள். நவராத்திரி உற்சவம் நடைபெற்று முடிந்த நிலையில் கோயில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், கோயில் ஆய்வாளர் அலமேலு, செயல் அலுவலர் உதவி ஆணையர் ராஜலட்சுமி, கோயில் காரியம் சுந்தரேசன், மணியக்காரர் சூரிய நாராயணன் ஆகியோர் முன்னிலையில் கோயில் பணியாளர்களும், தன்னார்வலர்களும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரொக்கமாக 53 லட்சத்து 41 ஆயிரத்து 982 ரூபாய் ரொக்கப் பணமும், 248 கிராம் தங்கமும், 772 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது. காணிக்கையாக கிடைத்த தங்கம் வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் வங்கியில் செலுத்தி வைப்புநிதியாக வரவு வைக்கப்பட்டது.
+
Advertisement