குன்றத்தூர், அக்.16: மாங்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கிவிட்டு தப்பியோடிய 35 பேரை, போலீசார் தேடி வருகின்றனர். மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை ஒரே ஒரு காவலாளி மட்டும், அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த 35 பேர், திடீரென ஒன்றுகூடி, அங்கு பணியில் இருந்த காவலாளியை தாக்கிவிட்டு, போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து, மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதால் அவர்கள் தப்பினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 35 பேர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும். தப்பியோடிய நபர்களின் பட்டியலை சேகரித்து, அவர்களின் குடும்பங்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்து தேடி வருகின்றனர்.