திருப்போரூர் - மாமல்லபுரம் இடையே உடைந்து காணப்படும் சாலை தடுப்புகள்: விபத்து ஏற்படும் என வாகன ஓட்டிகள் அச்சம்
திருப்போரூர், செப்.16: திருப்போரூர் - மாமல்லபுரம் இடையே உடைந்து காணப்படும் சாலை தடுப்புகளை அற்றிவிட்டு, புதியதாக அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலை சுமார் 15 கிமீ தூரம் உள்ளது. இந்த, சாலையின் நடுவே எதிரெதிரே வரும் வாகனங்கள் மோதிக்கொள்ளாமல் இருக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் மழை வெள்ளம் காரணமாகவும், வாகன விபத்துகள் காரணமாகவும் இந்த சாலை தடுப்புகள் உடைந்து சேதமடைந்து விட்டன.
இவற்றில், சில இடங்களில் சாலை தடுப்புகள் உடைந்து சாலையின் நடுவே கிடக்கின்றன. இதன் காரணமாக இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சேதமடைந்து கிடக்கும் சாலை தடுப்புகளின் மீது மோதி மீண்டும் விபத்தை சந்திக்கும் ஆபத்து உள்ளது. இதுமட்டுமின்றி, இச்சாலை தடுப்புகள் சேதமடைந்து இருப்பதை பயன்படுத்தி, சில வாகன ஓட்டிகள் அந்த பகுதியை யூ டர்ன் எடுக்கும் இடமாக மாற்றி விடுகின்றன. இதனாலும் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே, நெடுஞ்சாலைத்துறை திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ள உடைந்தும், சேதமடைந்தும் காணப்படும் சாலை தடுப்புகளை அகற்றி விட்டு, புதிய சாலை தடுப்புகளை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.