போரூர்: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக மார்க்கெட் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால், இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், மார்க்கெட் வளாகத்தில் நடைபெறும் வடிகால் பணிகளை சிஎம்டிஏ அதிகாரி ராஜான் பாபு மற்றும் கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், அதிகாரிகள் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக கோயம்பேடு மார்க்கெட் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதர பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம். கோயம்பேடு மார்க்கெட் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.