வாலாஜாபாத், அக்,14: வாலாஜாபாத்தை அடுத்துள்ள அவளூர் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், அங்கம்பாக்கம், ஆசூர், மகரல், ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளில் இருந்து அவளூர் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் கட்டுமான பணிகளுக்காக எம் சாண்ட், ஜல்லி கற்கள் உள்ளிட்டவைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்நிலையில், எடுத்துச் செல்லப்படும் லாரிகள் இரவு பகலாக நேர கட்டுப்பாடு இன்றி சென்று வந்தன. இதனால், கிராம மக்கள் போக்குவரத்து நெரிசலில் நாள்தோறும் தவித்து வந்தனர். இது குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் முறையிட்டதன்பேரில் இப்பகுதியில் செல்லும் லாரிகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இருப்பினும் நேர கட்டுப்பாட்டை மீறி நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் சென்று வருகின்றன. இதனை கண்டித்து நேற்று காலை வாலாஜாபாத் பாலாற்று தரைபாலம் அருகே கிராம மக்கள் லாரியை சிறைப்பிடித்தனர்.
இதனை அடுத்து அங்கு வந்த வாலாஜாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசாரிடம் அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், காலை முதலே லாரிகள் இந்த சாலை வழியாக தொடர்ந்து செல்ல ஆரம்பித்து விட்டன. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் இந்த சாலை வழியாக எந்தவித கனரக லாரிகளும் செல்லக்கூடாது என உள்ள நிலையில் நேற்று காலையிலேயே அதிக லாரிகள் இப்பகுதியில் வர துவங்கின.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு சொல்லும் மாணவ, மாணவிகளும் அரசு பணிகளுக்கு செல்லும் அலுவலர்களும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் தவித்தனர். இது போன்ற நிலையில் இப்பகுதியில் போலீசார் நேர கட்டுப்பாட்டை மீறி வரும் லாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், அவளூர் எல்லையில் நேர தட்டுப்பாடு உள்ளது. இந்த நேரங்களில் லாரிகள் அனுமதி இல்லை என எச்சரிக்கை பலகை வைத்தும் பயனிலை. காவல்துறையினர் இந்த வழியாக நேர கட்டுப்பாட்டை மீறி சொல்லும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.