சவுதியில் இருந்து கோலாலம்பூர் சென்றபோது நடுவானில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு மூச்சுத்திணறல்: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்
மீனம்பாக்கம், அக்.14: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து சுமார் 290 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு மலேசியாவின் கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. சென்னை வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த பெண் பயணிக்கு திடீரென கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுவாசிப்பதற்கு பெரிதும் அவதிப்பட்டார். இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தலைமை விமானி தகவல் தெரிவித்து, விமானத்தை தரையிறக்கி, அப்பெண் பயணிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவை ஏற்பாடு செய்து அளிக்கும்படி வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை 4.45 மணியளவில் சென்னையில் அந்த விமானம் தரையிறங்கியது. அங்கு, தயாராக இருந்த மருத்துவ குழுவினர், மூச்சு திணறலால் அவதிப்பட்ட பெண் பயணிக்கு, ஆக்சிஜன் சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் அப்பெண் பயணி சகஜ நிலைக்கு திரும்பி இயல்பாக சுவாசிக்கத் துவங்கினார். இதையடுத்து, நேற்று அதிகாலை 5.40 மணியளவில் அப்பெண் பயணியுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது.