காஞ்சிபுரம், செப்.14: காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம், வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் 632 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான ஜெ.மேவிஸ் தீபிகா சுந்தரவதனா அறிவுறுத்துதலின்படி, காஞ்சிபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி யு.செம்மல் தலைமை தாங்கி, தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ரூ.11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. இதில், தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெய, காஞ்சிபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் (பொறுப்பு) சார்பு நீதிபதி திருமால், தலைமை குற்றவியல் உரிமையியல் நீதிபதி மோகனாம்பாள், கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிபதி சந்தியாதேவி, நீதித்துறை நடுவர்-1 இனிய கருணாகரன், நீதித்துறை நடுவர் 2 நவீன் துரை பாபு ஆகியோர் கலந்துகொண்டு, வழக்குகளுக்கு தீர்வு கண்டனர்.
மேலும், மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக் கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நலவழக்கு மற்றும் தொழிலாளர் நல வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரத்தில் 1933 வழக்குகளில், 577 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு, இழப்பீட்டு தொகையாக ₹7 கோடியே 47லட்சத்து 82 ஆயிரத்து 326 வழங்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி வழக்குகள் மொத்தம் 1346 வழக்குகள் எடுக்கப்பட்டு, 55 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டம் முழுவதும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுப்பிரமணி, லாயர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் திருப்பதி முரளி கிருஷ்ணன், வக்கீல்கள் ஜான், பத்மநாபன், துரைமுருகன், வடிவேல், யுவராணி, சரளா காப்பீட்டு நிறுவன வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.