காஞ்சிபுரம், ஆக.14: காஞ்சிபுரத்தில், அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், கவன ஈர்ப்பு ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று காஞ்சிபுரம் காவலான் கேட் அருகில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில மதிப்புறு தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கும் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி பேசினார். இந்த, ஆர்ப்பாட்டத்தில் மாநில மேலாளர் தலைமையிட செயலாளர் சீனு ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் மாணிக்கவேலு, மாவட்ட செயலாளர் திருவேங்கடம், நிர்வாகிகள் ராஜ்வி, ஆனந்தகுமார், ருக்குமணி, செந்தாமரை, செல்வி, வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.