1670-1790ம் ஆண்டு வரையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கான தொகுப்புகளை புத்தாக்கம் செய்து வெளியீடு: தமிழ்நாடு ஆவண காப்பகம் தகவல்
தாம்பரம், நவ. 13: கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில் 1670 முதல் 1790ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கான 35 உள்ளடக்கத் தொகுப்புகளை புத்தாக்கம் செய்து அதன் வலைதளத்தில் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையம் கடந்த நூற்றாண்டுகளைச் சார்ந்த பெரும் எண்ணிக்கையிலான ஆவணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் பிரிட்ஷஷ் பதிவுகளின் அச்சு பட்டியல்கள் என்றழைக்கப்படுகிற, 1800ம் ஆண்டிற்கு முற்பட்ட ஆவணங்கள் பழைய ஆவணங்களின் சுருக்க விவரங்களைத் தாங்கி உள்ளடக்கப் பதிவேடுகளாகத் திகழ்கிறது.
இத்தகைய ஆவணங்களின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மேற்சொன்ன அச்சு பட்டியல்கள் 45 தொகுப்புகளாக 1892 முதல் 1912 வரையிலான காலகட்டத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.இந்த உள்ளடக்கப் பதிவேடுகள் 1670 முதல் 1800 வரையிலான ஆண்டுகளின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளின் ஆவணங்களைப் பற்றியதாகும். கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாக அலகுகள் அமைந்திருந்த கஞ்சம், விசாகப்பட்டினம், மசூலிப்பட்டிணம், தென் ஆற்காடு மற்றும் மலபார் ஆகிய பகுதிகளின் நடவடிக்கைகள் தொடர்பான 603 ஆவணத் தொகுப்புகளுக்கும் உள்ளடக்கங்களைக் கொண்டவையாக மேற்சொன்ன 45 தொகுப்புகள் அமைந்துள்ளன.
வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் 1670ம் ஆண்டு முதல் 1800 வரையிலான காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் மேற்சொன்ன அச்சு பதிவுகளின் பட்டியல்கள் 45 தொகுப்புகளைத் தொழில் நுட்ப உதவியுடன் எண்ணிம வடிவிலும், சொல் அடிப்படையில் தேடுகிற வசதியுடன் கூடியதாகவும் மாற்றி மறுபதிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மேற்கொண்டது. இப்பணியில், தமிழ்நாடு ஆவணக் காப்பகம், கல்வியாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் பயனுறும் வகையில், 1670 முதல் 1790ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கான 35 உள்ளடக்கத் தொகுப்புகளை புத்தாக்கம் செய்து அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் வலைதளமாகிய www.digitamilnaduarchives.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் மேற்சொன்ன 35 உள்ளடக்கத் தொகுப்புகளைக் காணலாம். இவ்வாறு தமிழ்நாடு ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
