மாமல்லபுரம்: தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் சிறப்பு முகாம், மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது.
அப்போது, பெற்றோர்கள் ஆர்வமாக தங்களது குழந்தைகளை அழைத்து வந்து, போலியோ சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். இதேபோல், சுற்றுலா வந்த பயணிகளும் வரிசையில் நின்று தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொண்டனர். முன்னதாக, சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சோப்பு மற்றும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டதை காண முடிந்தது.