காஞ்சிபுரம், ஆக. 13: சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 15ம்தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மதுபானம்(உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989 விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி, அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் கீழ்கண்ட நாளில், நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினம் நாளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆக்ஸ்ட் 15ம் தேதி(வெள்ளிக்கிழமை) சுதந்திர தினம் முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.