மதுராந்தகம், அக்.12: கீழ்மருவத்தூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் விபத்தில் சிக்கி காயமடைந்ததுபோல் கை, தலையில் கட்டுபோட்டு நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் - சித்தாமூர் நெடுஞ்சாலையில் இருந்து கீழ்மருவத்தூர் செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள இணைப்பு தார் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இந்நிலையில், கீழ்மருவத்தூர் பிரதான சாலையை சீரமைக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பொதுமக்கள் விபத்தில் சிக்கி காயமடைந்ததுபோல் கை, தலையில் கட்டுகளுடன் கிராம சபை கூட்டத்திற்கு வந்தனர். ஊரக வளர்ச்சி துறை மண்டல அலுவலர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் சாலையை சீரமைக்கக்கோரி நூதன முறையில் மனு அளித்தனர். இதனால், கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
+
Advertisement