செய்யூர், டிச.11: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் பகுதியில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம், வட்டார கல்வி மையம், அரசு மாணவியர் விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தபால் நிலையம், நூலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதனால், தினமும் ஏராளமான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இவ்வாறு பொதுமக்கள் கூடும் இந்த வளாகத்தில் மழைக்காலங்களில் மழைநீர் சூழ்ந்து வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. அந்நேரங்களில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், விடுதி மாணவிகள் வளாகத்திற்குள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் விடுதி மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கும் மழைநீர் வெளியேறும் வகையில் வளாகத்தை சுற்றி மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வளாகத்தை சுற்றி மழைநீர் வடிகால்வாய் அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
+
Advertisement


