Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சி குமரகோட்டம் கோயிலில் அனுமதியின்றி வேல் பூஜை இந்து அமைப்பினர் கைது: போலீசாருடன் வாக்குவாதம்

காஞ்சிபுரம்,நவ.11: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வேலுடன் வந்து கோயில் பூஜை செய்து கந்த சஷ்டி கவசத்தினை பாராயணம் செய்திட இந்து சமய அறநிலையத் துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அனுமதி அளிப்பதாக கூறிய நிலையில் நேற்று கோயில் நிர்வாகம் திடீரென விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கு அனுமதி மறுத்தது. மேலும் கோயிலுக்கு அமைப்பினர் வருவது குறித்து அறிந்து கோயில் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

அதன்பேரில் குமரக்கோட்டம் வாசலில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பேரிகாடுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் நேற்று ஈடுபட்டனர். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமையில், வட தமிழக மாநில அமைப்பு செயலாளர் ராமன், செயற்குழு உறுப்பினர் வீரராகவன், கோட்ட செயலாளர் கிருபானந்தம், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கையில் ஆளுயர வேல் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அனுமதி இன்றி கையில் வேலுடன் கோயிலுக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாங்கள் என்ன ஏ.கே.47 துப்பாக்கியா உள்ளே கொண்டு போகிறோம்? என சராமாரியாக கேள்வி கேட்டு போலீசாருடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தடையை மீறி கோயிலுக்குள் நுழைய முயன்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் 12 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.